கேரளா: பேருந்து நிலையங்கள் தோறும் மதுபான கடைகள்

by Editor / 05-09-2021 12:35:09pm
கேரளா:  பேருந்து நிலையங்கள் தோறும் மதுபான கடைகள்

கேரளாவில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும் குடிமகன்களுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் பேருந்து நிலையங்களில் மதுபான கடைகள் திறக்கப்படும் என அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ தெரிவித்துள்ளார். ஆனால் இதனை எந்த விலை கொடுத்தேனும் முறியடிப்போம் என சில தன்னார்வ அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.

நாட்டில் தனிநபர் மதுபான நுகர்வு அதிகம் உள்ள மாநிலமாக கேரளா இருந்து வருகிறது. அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் கேரளாவில்தான் மதுவிற்பனை அதிகமாக உள்ளது.கேரளா மாநில அரசு சார்பிலும் நுகர்வோர் கூட்டமைப்புகள் சார்பிலும் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் நாட்டிலேயே முன்மாதிரியான மொபைல் செயலி மூலம் மதுவிற்பனை, வீட்டுக்கே மதுபானம் சப்ளை என அவ்வப்போது புதிய யுக்திகளை கேரளா அரசு கையாளவும் செய்கிறதுகொரோனா பாதிப்பு காலத்திலும் கூட கூட்டத்தைக் கூட்டாமல் வருவாய்க்காக மதுபான கடைகள் திறக்க உத்தரவிட்டிருந்தது கேரளா அரசு. இது மிகப் பெரும் விவாதப் பொருளாகவும் மாறியது. மேலும் கேரளாவின் குடிமகன்களுக்கு உரிய வசதிகள் செய்து தரக் கோரி நீதிமன்றங்களில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிக்கின்றன.

இப்படி கேரளா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதி தேவன் ரவிச்சந்திரன் அண்மையில் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார். அதாவது, கேரளாவில் மதுபான கடைகள் முன்பாக திரளும் கூட்டத்தை போலீசார் முறைப்படி ஒழுங்குபடுத்த வேண்டும். மதுபான கடைகள் முன்பாக பெருமளவ் கூட்டம் திரண்டிருப்பதை நேரடியாக பார்த்திருக்கிறேன். கொரோனா தடுப்பூசி சான்றிதழ், அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொடுத்தால்தான் மதுவிற்பனை என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.திருவனந்தபுரத்தில் கேரளா போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கேரளாவில் பெரும்பாலான பேருந்து நிலையங்களில் பல இடங்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. இந்த இடங்களில் மதுபான சில்லறை விற்பனை கடைகளை அமைக்கலாம் என யோசித்து வருகிறோம். அப்படி செய்தால் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். கூட்ட நெரிசலையும் தவிர்க்க முடியும்.
கேரளா உயர்நீதிமன்றமும், மதுபான கடைகள் முன்பாக கூட்டம் அதிகமாக கூடுவதாக கவலை தெரிவித்திருந்தது. இவற்றை ஒழுங்குபடுத்தவே பேருந்து நிலையங்களில் மதுபான கடைகளை திறக்க உள்ளோம். இந்த கடைகளில் மதுபானங்களை வாங்க மட்டுமே முடியும். உட்கார்ந்து குடிக்க அனுமதிக்கப்படமாட்டாது. இதனை போக்குவரத்து கழக ஊழியர்கள் தவறாக பயன்படுத்தவும் கூடாது. பணிநேரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் மதுபானம் அருந்த கூடாது. குடிமகன்களும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும். அரசு பேருந்து நிலையங்களில் சட்டப்பூர்வமான அனைத்து நிறுவனங்களுக்கும் இடம் வாடகைக்கு தரப்படும். என்றார் ஆண்டனி ராஜூ. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கேரளா மாநில அரசின் போக்குவரத்துக் கழக இயக்குநர் பிஜூ பிரபாகர், குடிமகன்களுக்கு உரிய வசதிகளை செய்து தர சொல்கிறது உயர்நீதிமன்றம். இதனை செயல்படுத்தும் வகையில்தான் பேருந்து நிலையங்களில் மதுபான கடைகளை திறப்பது குறித்து ஆய்வு செய்துள்ளோம். பேருந்து நிலையங்களில் மதுபான கடைகள் திறப்பதால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கமாட்டார்கள் என்றார்.

இதனிடையே அமைச்சர் ஆண்டனி ராஜூவின் இந்த கருத்துக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்து மதுவுக்கு எதிரான அமைப்பினர், எந்த விலை கொடுத்தேனும் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்துவோம். இப்படியான திட்டமே ஒரு பைத்தியக்காரத்தனமானது. மதுபானம் வாங்க வருவோரால் பெண்கள், குழந்தைகள், பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். கேரளா பேருந்து நிலையங்கள் பிரச்சனைகளின் மையங்களாகிவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via