மெகா தடுப்பூசி சிறப்பு முகாமில் ஆர்வமுடன் திரண்ட பொதுமக்கள்

by Editor / 12-09-2021 08:29:30pm
மெகா தடுப்பூசி சிறப்பு முகாமில் ஆர்வமுடன் திரண்ட பொதுமக்கள்

தமிழகம் முழுவதும் கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் துவங்கியது. முகாம்களுக்கு மக்கள் தாமாகவே முன்வந்து ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

தமிழகத்தில் 40 ஆயிரம் மையங்களில் ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு பகுதியிலும் தடுப்பூசி போடாத மக்களை தடுப்பூசி போட வைக்க விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஒலிபெருக்கி வாயிலாக தெருத்தெருவாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. செல்போன்களிலும் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் கொடுக்கப்பட்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், மற்ற நாட்களில் தடுப்பூசி செலுத்த இயலாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான வழிவகை செய்யப்பட்டது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளி, கல்லூரிகள், விமான நிலையம், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி முகாம்களுக்கு மக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி போட்டனர். சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட உதவிகள் செய்தனர். அந்தந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடாதவர்கள் வந்து ஊசி போட்டுக்கொள்ளுங்கள் என்று அவர்கள் கூறினார்கள். இதனால் நிறைய முகாம்களில் காலையிலேயே கூட்டம் அதிகமாக காணப்பட்டது.பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும்போது ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள அனைத்து மையங்களிலும் முதலுதவி சிகிச்சை கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக கண்டறியப்பட்ட மாவட்டங்களில் கூடுதல் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அந்த வகையில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், செங்கல்பட்டு, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதலாக தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளத குறிப்பாக 2-வது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள், தடுப்பூசி முகாம் மூலமாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.அனைத்து முகாம்களிலும் தேவைக்கு அதிகமாகவே தடுப்பூசிகள் கைவசம் இருந்தது. இதனால் முகாமுக்கு வந்த யாரும் தடுப்பூசி போடாமல் ஏமாற்றம் அடையவில்லை. அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டதுஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் சிறப்பு முகாம்களுக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

 

சென்னையில் மட்டும் 1,600 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 200 வார்டுகளுக்கும் தலா 8 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 8 முகாம்கள் காலை, நண்பகல், மாலை என்ற 3 பிரிவுகளாக செயல்படுகின்றன.

சென்னையில் எந்தெந்த இடங்களில் எந்தெந்த நேரங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பதை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி இணையத்தில் வெளியிட்டுள்ளது.

இறையன்பு நேரில் ஆய்வு

சென்னையில் தடுப்பூசி போடும் முகாம்களை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் சென்று பார்வையிட்டார். மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி, நங்கநல்லூர் டி.என்.ஜி.ஒ. காலனி, அண்ணா பல்கலைக்கழக ஹெல்த் சென்டர், அடையார் கஸ்தூரிபா நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி, கோட்டூர்புரத்தில் உள்ள மாநகராட்சி சுகாதார மையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களையும் நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு தடுப்பூசி போட வந்த மக்களிடம் ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டுள்ளதா என்று விவரங்களை கேட்டறிந்தார்.

சுகாதார செயலர்

டாக்டர் ராதாகிருஷ்ணன்

சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சென்னை ஓமந்தூரார் பன்நோக்கு அரசு மருத்துவமனைக்கு இன்று காலையில் சென்று தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லநாடு ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

 

Tags :

Share via