உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

by Editor / 15-09-2021 10:30:42am
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இரண்டு வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும், இந்த விடுபட்ட மாவட்டங்களில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. எனவே இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே, இந்த ஒன்பது மாவட்டங்களிலும் வேட்புமனு தாக்கல் இன்று (15.09.2021) துவங்குகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். வரும் 23ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். 25ஆம் தேதி வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாளாகும். அக்டோபர் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

 

Tags :

Share via