தேர்தல்களில் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் - திமுக எம்.பி கனிமொழி

by Editor / 20-09-2021 03:08:50pm
தேர்தல்களில் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் - திமுக எம்.பி கனிமொழி

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரியும் தமிழகம் முழுவதும் மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் திமுக எம்பியும் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி சென்னை சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்தின் அருகே கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்து தமிழகம் முழுவதிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மத்திய ஆட்சியில் காங்கிரஸ் இருந்தபோது பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது பாஜக அரசு விலைவாசியை அதிகரித்து வருகிறது. கொரோனா காலத்தில் நமக்கு உணவளித்த விவசாயிகளுக்கு எதிராக வேளாண் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்கும் பாஜக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்று தெரிவித்தார்.

மேலும், திமுக தலைமை முடிவின்படி அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும் என்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்றும் கூறினார்.

 

Tags :

Share via