எனக்கு வங்கியில் ரூ 40 கோடி கடன்  உள்ளது: முன்னாள்  அமைச்சர் வீரமணி

by Editor / 20-09-2021 07:50:56pm
எனக்கு வங்கியில் ரூ 40 கோடி கடன்  உள்ளது: முன்னாள்  அமைச்சர் வீரமணி



எனக்கு வங்கியில் 40 கோடி ரூபாய் கடன் உள்ளதாக முன்னாள் அமைச்சர் வீரமணி கூறினார்.முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் வீரணியின் திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் உள்ள வீடு, அவரது ஆதரவாளர்கள் என 35 இடங்களில் கடந்த 16 ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தில் நகை, கார், மணல் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக வீரமணி மீது வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் திருப்பத்துாரில் மாஜி அமைச்சர் வீரமணி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:உள்ளாட்சி தேர்தலில் எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் தவறான செய்திகள் வருகின்றன.

பத்திரிக்கை தர்மம் உள்ளது. ஆதாரத்துடன் செய்திகளை வெளியிடுங்கள்.லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் என் வீட்டில் பணமோ, கிலோ கணக்கில் நகையோ, கைப்பற்றப்படவில்லை.என்னிடம் கைப்பற்றிய 5,600 ரூபாய் மற்றும் 500 பவுன் நகைக்கு கணக்கு உள்ளது என்பதால் திருப்பி கொடுத்து விட்டனர்.நான் 7 வது படிக்கும் போதே என் தந்தை பென்ஸ் கார் வாங்கி கொடுத்தார். நான் தற்போது வைத்திருக்கும் ரோல்ஸ் ராய் கார் மிகவும் பழமையனது.

அதன் மதிப்பு 5 லட்சம் ரூபாய் தான் இருக்கும். சிறு வயதில் இருந்தே கார் வாங்கி வருவது எனக்கு பழக்கம். பள்ளியில் படிக்கும் போதே ஜெர்மன் மெர்சிடீஸ் பென்ஸ் கார் வைத்திருந்தேன்.நான் நடத்திய பீடித் தொழில், விவசாயத்தில் 10 ஆயிரத்திற்கும் மேல் வேலை செய்துள்ளனர். என் மனைவிகளும் வசதி படைத்தவர்கள்.வீட்டின் பின்புறம் வீடு கட்டுவதற்காக மணல் வாங்கி வைத்திருந்தேன்.

அதற்கு ரசீதும் என்னிடம் உள்ளது.அமெரிக்க டாலர் 1. 75 லட்சம் மதிப்புள்ளது மட்டுமே கைப்பற்றப்பட்டது. என் மகள் ஆஸ்தியேலியாவில் படிக்கச் செல்வதால் சட்ட விதிகளின் படியே வெளிநாட்டு கரன்சிகளை வைத்திருந்தேன். ஐந்தாயிரம் டாலர்கள் வரை வைத்துக் கொள்ளலாம் என சட்டம் உள்ளது.தவறான தகவல்கள் நான் எதையும் மறைக்கவில்லை.

நான் ஆடம்பரத்தை விரும்பாதவன், மிகவும் எளிமையானவன். கட்டி கட்டியாக தங்கம், வைரம் எல்லாம் எங்களுக்கு எதற்கு.எனக்கு வங்கியில் 40 கோடி ரூபாய் கடன் உள்ளது. என் சொத்துக்கள் அண்ணன், தம்பிகள் பெயரில் கிடையாது. பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே நான் வருமான வரி கட்டி வருகிறேன்.

ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்திருக்கிறேன். சமூக வலைதளத்தில் என்னை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அது முற்றிலும் தவறு. இந்த விவகாரத்தை அரசியலாக்காமல், என் பெயர், புகழ், பாதிக்கப்படாமல் உண்மை செய்திகளை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via