ஒன்றிய கவுன்சிலர்கள் 6 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்: எடப்பாடி, ஓ.பி.எஸ். அறிவிப்பு

by Editor / 21-09-2021 03:56:18pm
ஒன்றிய கவுன்சிலர்கள் 6 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்: எடப்பாடி, ஓ.பி.எஸ். அறிவிப்பு

 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊரட்சி ஒன்றிய குழுத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த காரணத்தினால் ஒன்றிய கவுன்சிலர்கள் 6 பேர் அண்ணா தி.மு.க.விலிருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கழகத்தின் கொள்கை -குறிக்கோள்களுக்கும், கோட்பாடு களுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த காரணத்தினாலும், ஊராட்சி ஒன்றியக்குழு 1-வது வார்டு உறுப்பினர் இ.ஜெகதீஸ்வரன், 3-வது வார்டு உறுப்பினர் பி.எஸ்.அந்தோணி, 4-வது வார்டு உறுப்பினர் கே.மூக்கம்மாள், 5-வது வார்டு உறுப்பினர் ஜி.அறிவழகன், 6-வது வார்டு உறுப்பினர் ஆர்.செல்வி, 7-வது வார்டு உறுப்பினர் எம்.கலைச்செல்வி மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட உத்தமபாளையம் தெற்கு ஒன்றிய மீனவர் பிரிவு செயலாளர் ஆர்.சந்திரசேகரன், உத்தமபாளையம் தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணை தலைவர் ஆர்.பிரசாத், டி.கெப்புராஜ் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படு கிறார்கள்.

கழகத்தினர் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via