மோடியின் அமெரிக்க பயணம் ஏன்?

by Editor / 22-09-2021 10:48:29am
மோடியின் அமெரிக்க பயணம் ஏன்?

ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் 25-ஆம் தேதி நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடரில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதன்பின், 'க்வாட்' (Quad Summit) தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அமெரிக்க சுற்றுப்பயணம் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முன்னதாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகள் 'AUKUS' என்ற ராணுவக் கூட்டணியை உருவாக்கின. இந்தோ- பசிபிக் பகுதியில் தடையற்ற அமைதி, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு பராமரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த கூட்டமைப்பு செயல்படும் என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

இந்தோ- பசிபிக் கட்டமைப்பின் முக்கிய பங்குதாரராக விளங்கும் இந்தியா, 'AUKUS' கூட்டணி தேவையற்றது என்று கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்க பயணத்தில் ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா தலைவர்கள் கலந்துகொள்ளும் 'க்வாட்' உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். 'AUKUS' ராணுவக் கூட்டமைப்பால்,க்வாட் அமைப்பின் செயல்பாட்டில் எந்த பாதிப்பும் வராது என்றும் தெரிவித்துள்ளது.இந்திய வெளியுறவுத் துறை செயலலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இதுகுறித்து கூறுகையில், " 'AUKUS' என்பது முழுக்க முழுக்க ராணுவக் கூட்டமைப்பாகும். ஆனால்,'க்வாட்', ஒருங்கிணைந்த இந்திய-பசிபிக் பகுதியில் தடையற்ற போக்குவரத்தை வலியுறுத்திகிறது. மேலும், விநியோக சங்கிலியில் நெகிழ்வு, முக்கியமான தொழில்நுட்பங்கள், கடல் சார் பாதுகாப்பு மற்றும் பருவநிலை விஷயங்களில் நிலவும் சவால்கள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொள்கிறது" என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via