தோஷம் கழிப்பதாக தோழியை ஏமாற்றி நகை,பணம் பறித்த பெண் கைது 

by Editor / 24-09-2021 04:00:59pm
தோஷம் கழிப்பதாக தோழியை ஏமாற்றி நகை,பணம் பறித்த பெண் கைது 



மூடநம்பிக்கையை ஒழிக்க என்னதான் முயற்சி மேற்கொண்டாலும் கடவுள்களின் பெயரைச் சொல்லி இன்னும் மக்களை ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில்தான் தோழியாகப் பழகி, பல பெண்களிடம் தோஷங்கள் கழிப்பதாகக் கூறி ஏமாற்றி, நகை மற்றும் பணத்தைப் பறித்த நாகர்கோவிலைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த கஸ்தூரிராஜன் மனைவி சுஜிதா (34). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் நெருங்கிய தோழிகளாகப் பழகிவந்தனர். இதில் சுஜிதா, தினமும் பல்வேறு கோவில்களுக்குச் சென்றுவருவதுடன், குறி சொல்பவராகவும் தோஷங்கள் கழிக்கும் மந்திரவாதியாகவும் தன்னைக் காட்டிவந்தார். இந்த நிலையில், தோழியின் தாலிக்குத் தோஷம் இருப்பதாகவும் அதேபோல் அவரது இரண்டு மகள்களின் தாலி பாக்கியத்திற்குத் தடை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தோழி, தன்னுடைய கணவருக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்றும் மேலும் தனது இரண்டு மகள்களுக்குத் திருமணமும் நடக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதை தன்னுடைய திட்டத்துக்கு சாதகமாக்கிக் கொண்ட சுஜிதா, 'அதற்கு வீட்டில் இருக்கும் நகைகளை வைத்து தோஷம் கழிக்க வேண்டும். அந்தப் பரிகார பூஜையை நானே செய்கிறேன்' எனக் கூறி பூஜைக்கான ஏற்பாடுகளை செய்வதாக கூறி நகைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கியுள்ளார். அப்படி அவர் வாங்கிய நகை 22 பவுன்.
அதன் பிறகு தாலிச் செயினையும் கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த தோழி, கணவனிடம் விசயத்தைக் கூறியுள்ளார். கணவர், சுஜிதாவிடம் கேட்டபோது அவரின் மழுப்பல் பேச்சில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து மனைவி மூலம் வடசேரி போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீஸ் விசாரணையில் அவள் போலியான மந்திரவாதி என தெரியவந்தது.
இதையடுத்து சுஜிதாவை கைது செய்து விசாரித்த போலீசார், சுஜிதா இந்தப் பெண்ணை மட்டுமல்ல, அவர் செல்லும் கோவிலுக்கு வரும் பெண்களிடமும் அதேபோல் திருமண நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது அங்கு வரும் பெண்களிடமும் நைசாக பேசி, அவர்களைத் தோழியாக்கி, இப்படி தோஷம் இருப்பதாகக் கூறி அவர்களிடமிருந்து நகைகள் மற்றும் பணத்தைப் பறித்துள்ளார்.

 

Tags :

Share via