தமிழகம் முழுவதும் இன்று 4–ம் கட்ட கொரோனா மெகா தடுப்பூசி முகாம்

by Editor / 03-10-2021 05:04:56pm
தமிழகம் முழுவதும் இன்று 4–ம் கட்ட கொரோனா மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் 4ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கியது. 20 ஆயிரம் இடங்களில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டு செப்டம்பர் 12ம் தேதி 40 ஆயிரம் இடங்களில் நடந்த முதல் மெகா தடுப்பூசி முகாமில் 20 லட்சம் தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கையும் தாண்டி 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.அதேபோல 19 ந்தேதி 20 ஆயிரம் இடங்களில் நடந்த 2வது முகாமில் 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. 26 ந்தேதி 23 ஆயிரம் இடங்களில் நடந்த 3வது முகாமில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை தாண்டி 24 லட்சத்து 85 ஆயிரத்து 814 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. அதில் சென்னையில் மட்டும் 2 லட்சத்து 13 ஆயிரத்து 763 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். சென்னையில் 5 இடங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.இந்நிலையில், தமிழகம் முழுவதும் 4வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கியது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரெயில் நிலையங்கள், பூங்காக்கள் உட்பட மொத்தம் 20 ஆயிரம் இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது.காலை 7 மணி தொடங்கிய இந்த முகாம் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 25 லட்சம் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஒவ்வொரு வார்டிலும் தன்னார்வலர்கள், பொதுமக்களுக்கு தகவல் கொடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வருமாறு அழைப்பு விடுத்தனர். மாநகராட்சி, நகராட்சி சார்பிலும் வீடு, வீடாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் தடுப்பூசி போட அழைப்பு விடுத்தனர்.

மாநகராட்சி வாகனங்கள் மூலமும் அறிவிப்புகள் செய்து தடுப்பூசி முகாமுக்கு பொது மக்களை வரவழைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஒவ்வொரு மையத்திலும் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர்.கிராம பகுதிகளிலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். மாவட்ட சுகாதார அதிகாரிகள், ஆரம்ப சுகாதார ஆய்வாளர்கள் தனிக்குழுக்களை அமைத்து இதுவரை தடுப்பூசி போடாத நபர்களை கண்டறிந்து தடுப்பூசி போட ஏற்பாடு செய்திருந்தனர்.மதியம் 1.30 மணி அளவில் 9 லட்சத்து 9 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

 

Tags :

Share via