வக்பு சொத்துக்களின் விவரம் விரைவில்  இணையதளத்தில் வெளியிடப்படும் அப்துல் ரஹ்மான் தகவல்

by Editor / 05-10-2021 08:13:00pm
வக்பு சொத்துக்களின் விவரம் விரைவில்  இணையதளத்தில் வெளியிடப்படும் அப்துல் ரஹ்மான் தகவல்

வக்பு வாரியச் சொத்துக்களின் விவரம் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என அதன் தலைவர் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


முதலமைச்சரை சந்தித்து மறைந்த கவிக்கோ அப்துல் ரஹ்மானுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திய பிறகு அவர் இதனைக் கூறினார்.மேலும், வக்பு சொத்துக்களை தனி நபர் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க தமிழக அரசு முழு ஒத்ழைப்பு நல்கி வருவதாக தெரிவித்தார்.


தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அப்துர் ரஹ்மான் மற்றும் வாரிய உறுப்பினர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  குழுவாக சென்று சந்தித்தனர். அப்போது கேரள-தமிழ்நாடு எல்லை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிய எல்லை போராட்ட தியாகியான கொடிக்கால் ஷேக் அப்துல்லாவை கவுரவிக்கும் வகையில், நவம்பர் 1 -ம் தேதி அன்று தமிழக அரசு சார்பாக பாராட்டி பொற்கிழி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 


அதைத் தொடர்ந்து மறைந்த கவிக்கோ அப்துல் ரஹ்மானுக்கு நூலகம், அருங்காட்சியகம், கூட்ட அரங்கு ஆகியவைகள் உள்ளடங்கிய நினைவு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இந்த இரண்டு கோரிக்கைகளையும் கேட்டுக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரஹ்மான், மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதாகவும் அரசியல் குறுக்கீடுகள் இன்றி வக்பு சொத்துக்களை மீட்க தமிழக அரசு முழு ஆதரவு நல்கி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், வக்பு வாரிய இணையதளம் பக்கம் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் மின்னணு மூலம் வக்பு சொத்துக்களை யார் வேண்டுமானாலும் பார்க்கும் வகையில் வெளியிடப்படும் எனவும் அப்துல் ரஹ்மான் உறுதியளித்தார்.


வக்பு வாரிய சொத்துக்களில் ரூ.2000 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள வழக்கு தொடர்பான தகவல்களை தமிழக அரசுக்கு அளித்துள்ளோம் என்றும் விரைவில் தமிழக அரசு நீதிமன்றத்தில் அது குறித்து பதில் அளிக்கும் எனவும் அப்துர் ரஹ்மான் கூறினார்.

 

Tags :

Share via