தமிழகத்தில் 9 மாதங்களில் 59 ஆயிரம் பேருக்கு காசநோய்

by Admin / 05-10-2021 11:21:43pm
தமிழகத்தில் 9 மாதங்களில் 59 ஆயிரம் பேருக்கு காசநோய்

 


காசநோய்க்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிகிச்சை காலத்தில் ஊட்டச்சத்து அளிப்பதற்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் காச நோயை முழுமையாக ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
 
மேலும் வருகிற 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்களிடையே காசநோய் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் காசநோயை குணப்படுத்தும் விகிதம் கணிசமாக உயர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காசநோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84 சதவீதம் பேரை முதல்கட்ட சிகிச்சையிலேயே குணப்படுத்துவதாகவும், மீதமுள்ள நோயாளிகளை தொடர் சிகிச்சைகள் மூலம் பூரணமாக குணமாக்குவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காசநோய் பாதிப்பு

மேலும் காசநோய்க்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிகிச்சை காலத்தில் ஊட்டச்சத்து அளிப்பதற்கான நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காச நோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது இந்தியா முழுவதும் 15 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் 3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை இந்த ஆண்டில் கடந்த 9 மாதங்களில் 59 ஆயிரத்து 164 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 46 ஆயிரத்து 313 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 12 ஆயிரத்து 851 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் முதல்கட்ட சிகிச்சை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு முதல் 9 மாதங்களில் 51 ஆயிரத்து 751 பேரே காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சற்று அதிகமானோர் காசநோய் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

 

Tags :

Share via