.. சேலத்தில்அ டுத்தடுத்து பெண்கள் தீக்குளிக்க முயற்சி

by Editor / 06-10-2021 10:28:34am
.. சேலத்தில்அ டுத்தடுத்து பெண்கள் தீக்குளிக்க முயற்சி

சேலம் மாவட்டத்திலுள்ள சி.என்.பாளையத்தில் பொன்மலர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன் ஆண் குழந்தையுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது பொன்மலர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பொன்மலரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பொன்மலருக்கும், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஏழுமலை 3 ஏக்கர் நிலம் கேட்டு பொன்மலரை கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொன்மலர் அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பின் கணவன்-மனைவி இருவரையும் குடும்பத்தினர் சமாதானம் செய்து சேர்த்து வைத்தனர். கடந்த 4 மாதங்களுக்கு முன் பொன்மலருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பிறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் ஏழுமலை, மனைவியை கொடுமை செய்து வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி தொடர்ந்து குழந்தையின் பிறப்பு குறித்து ஏழுமலை அவதூறாக பேசி வருவதால் மனமுடைந்த பொன்மலர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. ஆகவே அவரது கணவர் ஏழுமலை மற்றும் மாமியார், உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொன்மலர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று சிவதாபுரத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் தனது மகனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். இவர் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் வள்ளியம்மாள் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் வள்ளியம்மாள் வசிக்கும் பகுதியில் அவரின் தாயார் மற்றும் அண்ணன் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் வள்ளியம்மாள் தனது தாயை பார்ப்பதற்காக அடிக்கடி அங்கு சென்றுள்ளார். அப்போது வள்ளியம்மாளை பார்த்து அவரது அண்ணன் மற்றும் குடும்பத்தினர் சொத்திற்காக இங்கு வந்து செல்கிறாய் என்று கூறி தகராறு செய்துள்ளனர். இதுதொடர்பாக வள்ளியம்மாள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வள்ளியம்மாள் தீக்குளிக்க முயன்றது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனைதொடர்ந்து வள்ளியம்மாளிடம் விசாரணை நடத்துவதற்காக காவல்துறையினர் அவரை டவுன் போலீஸ் நிலையத்திற்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றனர்.

 

Tags :

Share via