பெங்களூரு விமான நிலையத்தில் வெள்ளம் விமானத்தில் ஏற டிராக்டரில் சென்ற பயணிகள்

by Editor / 12-10-2021 04:46:16pm
 பெங்களூரு விமான நிலையத்தில் வெள்ளம் விமானத்தில் ஏற டிராக்டரில் சென்ற பயணிகள்


கர்நாடகாவில் கனமழையால் பெங்களூரு விமான நிலையத்தில் வெளியே வெள்ள நீர் தேங்கியதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது.


கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரில் உள்ள பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து வருகிறது. மேலும் பழமையான வீடுகள், சுவர்களும் இடிந்து விழுந்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று காலை முதலே பெங்களூருவில் கனமழை பெய்தது. குறிப்பாக ராஜாஜிநகர், மெஜஸ்டிக், அனந்தராவ் சர்க்கிள், வெஸ்ட் ஆப் கார்டு ரோடு, கப்பன் பார்க், இந்திரா நகர், விதான சவுதா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.


இந்திரா நகரில் உள்ள ராணுவ பயிற்சி மைய வளாக சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அந்த சுவரின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன. கோனப்பன அக்ரஹார பகுதியில் வீடு ஒன்றில் மின் கசிவு ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.


இந்நிலையில் கனமழையால் நேற்று மாலை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே வெள்ள நீர் தேங்கியது. இதனால் விமான நிலையத்திற்குள் செல்ல முடியாமல் பயணிகள் தவித்தனர். காரில் வருபவர்கள் அங்கிருந்த டிராக்டர் மூலம் உடைமைகளுடன் விமான நிலையத்திற்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. அதே போல் விமானத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் பயணிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.

கனமழை காரணமாக பெங்களூருவில் இருந்து விமானங்கள் கிளம்புவதிலும் தாமதமானது. சென்னை, கொச்சி, புனே, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
பெங்களூருவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க தொழில்நுட்ப சிக்கல் இருப்பதால் சில விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டு திருப்பிவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.பெங்களூருவில்  இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via