ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

by Editor / 13-10-2021 10:16:15am
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

தமிழகத்தில் கொரோனா அதிகரித்த காலக்கட்டத்தில் பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்கிய ஊரகப்பகுதி ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கணக்கெடுப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் தங்கள் வேலைகளை இழந்து சிரமப்படுகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் அரசு மாவட்டம் தோறும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் நிவாரண தொகைகளையும், நிவாரண பொருட்களையும் வழங்கியது. மேலும் விலையில்லா சிறப்பு நிவாரண பொருட்களாக 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாஸ்க் வழங்க முடிவு செய்யப்பட்டது.

மேலும் அரசு ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மாஸ்க் வழங்கி வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரசின் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் ஊரக பகுதிகளில் உள்ள ரேஷன் கடை பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசு வாணிப கழகம், சுய உதவி குழுக்கள், இதர கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு முகக்கவசம் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் ஒரு ரேஷன் கார்டுக்கு தலா 50 பைசா வீதம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் மக்கள் கொரோனா வைரஸ் பரவல் பற்றிய விழிப்புணர்வு பெற்றனர். இந்த நிலையில் அரசு அறிவித்த படி ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்துள்ளது. அதற்கான கணக்கெடுக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணி ஓரிரு நாட்களில் முடிவடையும் அதன் பிறகு ஊக்கத்தொகை கணக்கிடப்பட்டு பணியாளர்களின் சம்பள கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via