ஜெ. நினைவிடத்துக்கு இன்று செல்கிறார் சசிகலா

by Editor / 16-10-2021 09:02:43am
ஜெ. நினைவிடத்துக்கு இன்று செல்கிறார் சசிகலா

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து தமிழகத்துக்கு காரில் வந்த சசிகலா, தொண்டர்கள் மத்தியில் பேசும்போது, தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று உறுதி அளித்தார். சென்னை திரும்பிய அவர், தி.நகரில் உள்ள உறவினர் வீட்டில்வசித்து வருகிறார். அப்போது சசிகலாவை சீமான், சரத்குமார் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.சசிகலா தனது அரசியல் பயணத்தை விரைவில் தொடங்குவார் என்று அப்போது பேச்சு எழுந்தது.

பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக குரல் கொடுப்பார்என்றும், தினகரனின் அமமுகவேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என்றும் கூறப்பட்டது. ஆனால், அதுபோல எதுவும் நடைபெறவில்லை.

இதற்கிடையே, ஆதரவாளர்களுடன் சசிகலா பேசிய ஆடியோக்கள் வெளியானதால் அவரதுஅரசியல் வருகை பற்றி மீண்டும் பேசப்பட்டது.

இந்நிலையில் சசிகலாவின் அரசியல் பிரவேசம் தொடர்பாக அவரது பெயரில் 'நமது எம்ஜிஆர்'நாளிதழில் கட்டுரை வெளியாகி வருகிறது. அதில், மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு அக்டோபர் 16-ம் தேதி(இன்று) செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொன்விழா 17-ம் தேதி (நாளை) தொடங்கும் நிலையில், ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா இன்று செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சசிகலா இன்று காலை 11 மணி அளவில் சென்று மலர்தூவி மரியாதைசெலுத்துகிறார். அவரை வரவேற்கமாநிலம் முழுவதும் இருந்து ஆதரவாளர்கள் சென்னை வருவதாகவும், அவர்கள் மத்தியில் பேசும்சசிகலா, அரசியல் வருகை குறித்துமுக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via