410 பேரிடம் இருந்து ரூ.1789 கோடி கோவில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு: பி.கே.சேகர்பாபு

by Editor / 23-10-2021 04:08:30pm
410 பேரிடம் இருந்து ரூ.1789 கோடி கோவில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு: பி.கே.சேகர்பாபு



தமிழ்நாட்டில் 410 ஆக்கிரமிப்பாளர் களிடமிருந்து 1,789.20 கோடி மதிப்பில் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோவில் நில ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்கும் வேட்டை தொடரும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


சென்னை குயப்பேட்டை கந்தசாமி ஆதி மொட்டையம்மன் கோவில் மேம்பாடு குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அமைச்சர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கோவில் மடப்பள்ளி சுத்தமாக வைக்கவும், திருக்குளத்தை சீரமைக்கவும், புதிய நந்தவனம் அமைக்கவும் துறை அலுவலருக்கு அறிவுரை வழங்கினார்.


திருக்கோவிலில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் ஆயிரமாண்டுகளுக்கு மேற்பட்ட கோவில்கள், குடமுழுக்கு நடைபெறாத கோவில்கள், பல்லாயிராண்டுகளுக்கு முன்பான கோவில்கள் மேம்பாடு செய்வது குறித்தும், ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் அர்ச்சகர்கள், பட்டாசாரிகள், மடப்பள்ளி ஊழியர்கள், அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் போன்ற எல்லா நிலைகளிலும் உள்ள பணியாளர்களின் குறைகளை களைய வேண்டுமென்று முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.


அதன்படி இந்த பழமையான கோவில் ஆய்வு செய்யப்பட்டது. திருக்குளத்தை சீரமைத்து மழைநீர் குளத்திற்கு வரும் வழியினை மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து துறை பணியாளர்களும் செயல்பட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. புதிதாக பொங்கல் வைக்கும் மண்டபம், புதிய நந்தவனம் கட்டப்படும். கோவில்களுக்கு சொந்தமான அருகில் உள்ள மீன் மார்கெட் அகற்றப்பட்ட அந்த இடத்தில் 40 கடைகள் நவீன முறையில் கட்டி தற்போது வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படும்.

இந்து சமய அறநிலையத்துறை மூலம் 342.38 ஏக்கர் நிலம், 317.21 கிரவுண்ட் மனை, 24.89 கிரவுண்ட் கட்டிடம், 16.25 கிரவுண்ட் குளம் ஆகியவை, 410 ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 1,789.20 கோடி ஆகும். கோயில் நில ஆக்கிரமிப்புகள் மீட்டெடுக்கும் வேட்டை தொடரும்.


சில அமைப்புகள் தி.மு.க, இந்துகளுக்கு, ஆன்மிகத்திற்கு எதிரான இயக்கம் என்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளனர். அதை முதலமைச்சர் பதவி ஏற்ற பிறகு தகர்த்து எறியப்பட்டுள்ளது. சிலர் குறைகளை கண்டு பேசி வருகின்றனர். அது நியாயமான குறைகள் என்றால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவிலிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பக்தர்களின் நேர்த்திக்கடனை தீர்ப்பதற்கு கோவிலுக்கு சொந்தமான 65 தங்கத்தேர்கள், 45 வெள்ளித்தேர்கள் இன்று முதல் கோவில் உள்ளே வீதிஉலா வர அனுமதி வழக்கப்பட்டுள்ளது.


குயின்ஸ்லேண்ட் விவகாரத்தில் இடத்தின் உரிமையாளரிடம் சமரசம் செய்ய இது பஞ்சாயத்து அரசு இல்லை. சட்டத்தின் அரசு, நீதிமன்றம் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்பதால் அந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்ளவில்லை. குயின்ஸ்லேண்ட் வழக்கு நீதிமன்றம் வரும் போது இந்து சமய அறநிலையத்துறை சார்பாக தான் வழக்கறிஞர் ஆஜராகினார். எனவே அந்த இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது.


சிலை கடத்தலை தடுக்கும் இந்த அரசு ஏற்கனவே கடத்தப்பட்ட சிலைகள் மீட்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ஓர் ஆண்டு இறுதியில் ஒட்டுமொத்தமாக எத்தனை சிலைகள் இதுவரை கடத்தப்பட்டுள்ளது, எத்தனை மீட்கப்பட்டது என்பதை தெரிவிப்போம்.

2011 ம் ஆண்டுக்கு பிறகு உள்ள நகைகளை உருக்கி வருவாயை பெருக்குவதை தேவையில்லாமல் பூதாகரம் ஆக்க நினைப்பவர்கள் நிச்சயம் தோல்வி அடைவார்கள். பூத கண்ணாடி வைத்து எந்த தவறும் நடைபெறாத வகையில் நீதியரசர்கள் தலைமையில் பணிகள் செய்து வருகின்றோம்.கோவில்களில் வருகின்ற வருமானத்தில் ஊதியம் பெறும் அனைத்து பணியாளர்களும் இந்துக்களாக இருக்க வேண்டுமென்று இந்து சமய அறநிலையத்துறையின் சட்டப்பிரிவின் கீழ் உள்ளது. அதன்படி அனைத்து பணியாளர்களும் இந்துக்களாக நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.

 

Tags :

Share via