ரஜினிகாந்துக்கு ‘தாதா சாகிப் பால்கே’ விருது: துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு வழங்கினார்

by Editor / 25-10-2021 03:56:14pm
 ரஜினிகாந்துக்கு ‘தாதா சாகிப் பால்கே’ விருது: துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு வழங்கினார்

 

நடிகர் ரஜினிகாந்துக்கு திரைப்பட உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது  வழங்கப்பட்டது.
2019-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்த்துக்கு அறிவிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விழா நடத்தப்படாமல் இருந்தது. டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.


இந்த விருதினை துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு வழங்கினார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
 காலை முதலே, சமூக வலைத்தளத்தில் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வந்துள்ளனர்.


தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றுக் கொண்டு ரஜினிகாந்த் பேசியதாவது:
"அனைவருக்கும் காலை வணக்கம், கவுரமிக்க இந்த விருதைப் பெறுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த தாதா சாஹேப் பால்கே விருதை எனக்குக் கொடுத்து கவுரவித்திருக்கும் மத்திய அரசுக்கு நன்றி. இந்த விருதை எனது வழிகாட்டி, எனது குரு கே பாலச்சந்தர் சாருக்கு அர்ப்பணிக்கிறேன். அதிக நன்றியுணர்வுடன் அவரை இந்தத் தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.
எனது சகோதரர் சத்யநாராயண கெய்க்வாட், என்னை ஒரு தந்தை போல வளர்த்தவர். நல்ல பண்புகளையும், ஆன்மிகத்தையும் எனக்குப் போதித்தவர், அவரை நினைத்துப் பார்க்கிறேன். கர்நாடகாவில் என்னுடன் பணியாற்றிய பேருந்து ஓட்டுநர், என் நண்பர் ராஜ் பகதூரை நினைத்துப் பார்க்கிறேன். நான் நடத்துநராக இருந்தபோது ராஜ்பகதூர் தான் என்னுள் இருக்கும் நடிப்புத் திறனை அடையாளம் கண்டு கொண்டார். திரைத்துறையில் நான் சேர ஊக்கம் கொடுத்தார்.
எனது படங்களைத் தயாரித்த, இயக்கிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்களை, அதில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களை, சக நடிகர்களை, விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள், என் அத்தனை ரசிகர்களையும் நினைவுகூர்கிறேன். தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இங்கு இல்லை. என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி. ஜெய்ஹிந்த்."
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.


ரஜனி பற்றிய குறும்படம் முன்னதாக திரையிடப்பட்டது.
லதா ரஜினிகாந்த், தனுஷின் மனைவி ஐஸ்வர்யா, ரஜினியின் பேரன்கள் யாத்ரா, லிங்கா, வேத் கிருஷ்ணா ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.


ரஜினிகாந்த் விருது பெற்ற போது அரங்கில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியான் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகிலிருந்து நடிகர் சிவாஜிகணேசன், டைரக்டர் கே.பாலசந்தர் ஆகிய இருவர் இந்த விருதினைப் பெற்றுள்ளார்கள்.தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும் ரஜினிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியத் திரைத்துறையில்‌ தங்களின்‌ அளப்பரிய பங்களிப்பிற்காக, இந்தியத் திரைப்பட உலகின்‌ மிக உயரிய விருதான மற்றும்‌ வெகு சிலருக்கே கிடைக்கப்பெற்ற அங்கீகாரமான தாதா சாகேப்‌ பால்கே விருது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்காக இந்திய மக்களின்‌ சார்பாகவும்‌, என்‌ சார்பாகவும்‌ வாழ்த்துக்களை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.


இந்நாள்‌, திரைப்படங்களை விரும்பும்‌ அனைவருக்கும்‌ மகிழ்ச்‌சி அளிக்கக் கூடியதொரு பொன்னாள் ஆகும்‌. இந்தியத்‌ திரை உலகிற்கான தங்களின்‌ வியத்தகு பங்களிப்புடன்‌ பொது வாழ்க்கையிலும்‌ தனிப்பட்ட வாழ்விலும்‌ தங்களின்‌ தலைசிறந்த பண்பினால்‌ நம்‌ நாட்டு இளைஞர்களைக் கவர்ந்திழுத்த பண்பாளர்‌ நீங்கள்‌.
நீங்கள்‌ நல்ல உடல் நலத்தோடு ஆண்டுகள்‌ பல நீடூழி வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்''‌ என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.


தாதாசாகேப் பால்கே விருது பெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தேசிய திரைப்பட விருதுகள் பெறும் நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:


திரைத் துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது பெறும் அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்.


திரைவானின் சூரியன் ரஜினி, தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்.நேசத்துடன் திரைக்கலையைப் போற்றி தரமான படங்கள் வழியே நம் நெஞ்சகங்களில் இடம்பிடித்து, இப்போது தேசிய திரைப்பட விருதுகள் பெறும் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, தனுஷ், ஆர்.பார்த்திபன், இமான் மற்றும் விஷால் ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள்.


மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்த்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

 

Tags :

Share via