பள்ளிக்கு வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...

by Editor / 30-10-2021 07:27:52pm
பள்ளிக்கு வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்கு வரும் குழந்தைகளை, உற்சாகமூட்டும் வகையில், நேசமுடன் வரவேற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் தற்போது பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நவம்பர் ஒன்றாம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு உற்சாகமூட்டும் வகையிலும், நம்பிக்கையூட்டும் வகையிலும், அவர்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர், விருந்தினர்களை வாசலுக்கு சென்று வரவேற்பதை போல, பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
குழந்தைகள் மத்தியில் கொரோனா குறித்த பயம் இருப்பதால், பரிதவிப்புடன் வரும் குழந்தைகளுக்கு, கொரோனா விதிகளை பின்பற்றி, இனிப்புகள் மற்றும் மலர்க்கொத்துகளுடன் சேர்த்து, அன்பையும், அரவணைப்பையும் வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், முதலிரண்டு வாரங்களுக்கு கதை, பாடல், விளையாட்டு, வண்ணம் தீட்டுதல், நினைவாற்றலை வளர்ப்பதற்கான விளையாட்டு உத்திகளை வழங்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ள அவர், பள்ளிக்கு வரும் குழந்தைகளை நேசமுடன் கண்போல போற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Tags :

Share via