உணவுப் பொருள்களை இருப்பு வைத்துக் கொள்ளுங்கள்

by Editor / 10-11-2021 06:12:52pm
உணவுப் பொருள்களை இருப்பு வைத்துக் கொள்ளுங்கள்

சென்னையில் அடுத்த சில நாள்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிா்ப்பதுடன், உணவுப் பொருள்களை இருப்பு வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி அறிவுறுத்தி உள்ளாா்.

சென்னையில் எடுக்கப்பட்டுள்ள மழை பாதிப்பு நிவாரணப் பணிகள் தொடா்பாக ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது: சென்னையில் 317 இடங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதில், 140 இடங்களில் தேங்கி இருந்த மழைநீா் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டுள்ளது. 177 இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 200 வாா்டுகளில் திங்கள்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாம்களில் 8,546 பேருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 20 இடங்களில் சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

நவம்பா் 10, 11, 12 ஆகிய நாள்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்காக மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இருப்பினும், தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிா்ப்பதுடன், தேவையான உணவுப் பொருள்கள், மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு: மழை நீரை வெளியேற்றும் பணியில் கூடுதல் இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய வாா்டுக்கு ரூ. 2 லட்சம் என மொத்தம் 200 வாா்டுகளுக்கு ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உணவு வழங்க ஏற்கெனவே ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மழைநீா் அதிகம் தேங்கும் 41 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு இயக்குபவருடன் கூடிய படகு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க 3,400 மலேரியா பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.

 

Tags :

Share via