மக்களோடு தொடர்பில் இருங்கள்: பிரதமர் அறிவுரை

by Editor / 30-04-2021 07:48:47pm
 மக்களோடு தொடர்பில் இருங்கள்: பிரதமர் அறிவுரை

 

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்கிறது. இந்தியாவின் நிலைமையை பார்த்து மற்ற நாடுகள் அச்சம் கொள்ளும் அளவுக்கு நிலை கைமீறி சென்று கொண்டிருக்கிறது. 
பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள்,ஆளுநர்கள், மருத்துவ நிபுணர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில்,   மோடி தலைமையில் காணொலி மூலமாக மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல் குறித்து ஆலோசிக்க அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், கொரோனா தொற்று உலகிற்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது என அமைச்சர்கள் தெரிவித்தனர். கடந்த 14 மாதங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ உபகரணங்கள் இருப்பின் அளவு குறித்து விவாதிக்கப்பட்டது. எப்படி இருப்பினும், மக்கள் முகக்கவசம் அணிதல், 6 அடி சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 
இதையடுத்து பேசிய பிரதமர் மோடி, ”கொரோனாவால் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையை சமாளிக்க அனைத்து அரசு துறைகளும், ஒற்றுமையாகவும், விரைந்தும் செயல்படுகிறது. இருப்பினும், அமைச்சர்கள் அந்தந்த பகுதி மக்களுடன் தொடர்பில் இருந்துக் கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், மக்களின் கருத்துகளை பெற வேண்டும். குறிப்பாக, உள்ளூர் மட்டத்தில் உள்ள பிரச்சினைகளை உடனடியாக அடையாளம் கண்டு, அதற்கு தீர்வு காண்பதை உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்

 

Tags :

Share via