மதுரை - மானாமதுரை புதிய மின்மயமாக்கப்பட்ட பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் ஆய்வு

by Editor / 05-12-2021 08:12:57pm
மதுரை - மானாமதுரை  புதிய மின்மயமாக்கப்பட்ட பாதையில்  ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய்  ஆய்வு

மதுரை - மானாமதுரை இடையான புதிய மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் இன்று ஆய்வு செய்தார். இதற்கான சிறப்பு ஆய்வு ரயில் மதுரையில் இருந்து காலை 9:30 மணிக்கு புறப்பட்டது. முதலில் திடீர் நகர் மற்றும் தெற்கு வாசல் அருகே உள்ள ரயில்வே பாலங்களில் ரயில்வே மின்வழி பாதை ஆய்வு செய்யப்பட்டது. பின்பு அனுப்பானடி ரயில்வே கேட்டை ஆய்வு செய்தார். சிலைமானில் உள்ள துணை மின் நிலையம், வழியில் இரு வளைவுகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மின் வழித்தட ஏற்பாடுகள், திருப்பாச்சேத்தி மானாமதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையை குறுக்கிடும் 400 கிலோ வாட் தமிழக மின் வாரிய மின் வழித்தடத்தையும் ஆய்வு செய்தார். ஆய்வு சிறப்பு ரயில் மானாமதுரைக்கு மதியம் 01.15 மணிக்கு சென்று சேர்ந்தது. வழிநெடுகிலும் பொதுமக்கள், பயணிகள் பயன்பாட்டு பகுதிகளில் "25000 கிலோ வாட் மின்சாரம் பாயும் மின் வழித்தடங்களை நெருங்க வேண்டாம்" என எச்சரிக்கை விளம்பரங்கள் உள்ளதா என சோதனை செய்தார். மானாமதுரை ரயில் நிலையத்தில் நடைமேடை ரயில்பாதை நடைமேம்பாலம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். பின்பு ரயில் வேக சோதனை ஓட்டம் நடைபெற்றது மானாமதுரையில் மதியம் 02.50 மணிக்கு புறப்பட்ட சிறப்பு ஆய்வு ரயில் 100 கிமீ வேகத்தில் பயணித்து மாலை 03.27 மணிக்கு 37 நிமிடங்களில் மதுரை வந்து சேர்ந்தது. ரயில்வே பாதுகாப்பு ஆணையருடன் முதன்மை மின்வழி திட்ட இயக்குனர் சமீர் டிஹே, கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு முதுநிலை கோட்ட மின்மயமாக்கல் பொறியாளர் பச்சு ரமேஷ், கோட்ட பாதுகாப்பு அதிகாரி மனோகரன் ஆகியோர் ஆய்வில் கலந்து கொண்டனர்.

மதுரை - மானாமதுரை  புதிய மின்மயமாக்கப்பட்ட பாதையில்  ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய்  ஆய்வு
 

Tags :

Share via