சுனாமி ஆழிப்பேரலையால் உலகில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் பலியான நாள்

by Editor / 26-12-2021 04:55:23pm
சுனாமி ஆழிப்பேரலையால்  உலகில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் பலியான நாள்

சென்னை,திருசெந்தூர்,கன்னியாகுமரி,வேளாங்கண்ணி,கோவளம் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் அதிகாலையிலும்,அந்தி மாலையிலும் கடற்கரை மணல்களில் பாதம் பதித்து பாதங்களை கடலலைகள்  முத்தமிட்டு செல்லும் அந்த ஜில்லான நிகழ்வுகள் மனதை மயக்கும் தன்மையுடையது.கவலைகளை கடல் அலைகள் மறக்கசெய்துவிடும் அந்தளவுக்கு கடலில் இருந்து வரும் அலையின் ஓசைகள் என்றுமே ஓய்வதில்லை. கடலின் மடியில் கண்களை திறக்கும் கதிரவன் போலத்தான் கடலோரம் வசிக்கும் மீனவர்களின் விடியலும்,கடல் அலைகளின் தாலாட்டில் தங்களை அர்பணித்துக்கொண்ட மீனவமக்களின் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் சங்கீதம்  அலைகளின்  ஓசைதான்.

தாலாட்ட தெரிந்த அலைகளுக்கு தன்னை நேசித்த மனிதர்களை தலைசுருட்டி மணலுக்குள் இழுத்துக்கொள்ளும் சூத்திரமும் தெரியுமென்பதையும்,இயற்கை அழிவை கொடுக்கும்  என்பதை உலகுக்கு சுனாமியெனும் ஆழி பேரலையால்  உணர்த்திய நாள் .

 இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சுனாமி என்னும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு உருவாகி 14 நாடுகளில் கடலோர பகுதிகளுக்குள் புகுந்தது.இதன் தொடர்ச்சியாக 26.12.2004 ஆம் ஆண்டு அதிகாலை.அமைதியான கடல் ஆக்ரோஷம்கொண்டு 
இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட 14 நாடுகளில் கரையோரம் வசித்த மக்களை வாரி சுருட்டியது. இந்த எதிர்பாராத பேரிடரில் மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் பலியானார்கள். 43 ஆயிரத்து 786 பேர் காணாமல் போனார்கள். உயிர்களை கண்விழிக்குமுன்னே காவுவாங்கிய கொடூரம் நிகழ்ந்த தினம் இன்று.

தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் சுனாமியின் கோர தாண்டவம் அரங்கேறியது. மொத்தம் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நாகப்பட்டினத்தில் மட்டுமே 6 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மரணத்திற்குள்ளானார்கள். கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் இறந்தனர். வயது வித்தியாசம் இன்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உயிர் நீத்தனர்.குடும்பத்தின் தலைவர்,வாரிசு என ஏராளமானவர்களை இழந்தவர்களின் கதறல் இன்னமும் கடற்கரையோரம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

சுனாமி ஆழிப்பேரலையால்  உலகில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் பலியான நாள்
 

Tags :

Share via