தமிழகத்தில் திமுகவை எதிர்த்து போட்டியிடும் அளவிற்கு எந்த கட்சியும் இல்லை. வருவாய் துறை அமைச்சர் பேச்சு

by Editor / 12-02-2022 09:16:47pm
தமிழகத்தில் திமுகவை எதிர்த்து போட்டியிடும் அளவிற்கு எந்த கட்சியும் இல்லை.  வருவாய் துறை அமைச்சர் பேச்சு

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்த நிலையில், தென்காசி மாவட்டத்திலுள்ள புதூர், பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், உள்ளிட்ட பேரூராட்சிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும், கடையநல்லூர், செங்கோட்டை உள்ளிட்ட நகராட்சி பகுதியில்  திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் கடையநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லத்துரை உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது அமைச்சர் பேசியதாவது,

கடந்த 6 மாத திமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் எனவும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை எட்டி அதை முதல்வர் ஸ்டாலினுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும் எனவும் பேசினார்.

தொடர்ந்து பேசுகையில், அடுத்த 20 ஆண்டு காலம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தான் தமிழகத்தில் ஆட்சி நடைபெறும் எனவும், தமிழகத்தில் திமுகவை எதிர்த்து போட்டியிடும் அளவிற்கு தற்போதைய சூழலில் எந்த கட்சியும் இல்லை. அதிமுகவினருக்கு சண்டைகள் போடவே நேரம் சரியாக உள்ளது எனவும் பேசினார்.இதே போன்று தென்காசி தெற்குமாவட்டத்திலும் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது.

 

Tags :

Share via