பெண் வனக்காவலர்-ஆயுதப்படை காவலர் கள்ளக்காதல் கொலையில் முடிந்தது.

by Editor / 14-02-2022 02:18:19pm
பெண் வனக்காவலர்-ஆயுதப்படை காவலர் கள்ளக்காதல் கொலையில் முடிந்தது.

மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 27). இவர், மதுரை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை இவர், மதுரை கீரைத்துறை காவல்  நிலையத்துக்கு சென்று தான் தேனி மாவட்டம் போடி வனத்துறை அலுவலகம் அருகே வசிக்கிற வனக்காவலர் சரண்யா (27) என்பவரை தான் கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தனர். 

இதுகுறித்து போடி நகர் காவல் நிலையத்துக்கு, கீரைத்துறை போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், போடியில் உள்ள சரண்யாவின் வீட்டுக்கு சென்றனர். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று  பார்த்தபோது, படுக்கையறையில்  சரண்யா பிணமாக கிடந்தார். அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது.

 விவரம் வருமாறு:- மதுரை சதாசிவம் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பொன்பாண்டி. அவருடைய மனைவி சரண்யா. இவர்களுக்கு தக்‌ஷினா (8), சுதாக்‌ஷினா (5) என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் பொன்பாண்டி இறந்துவிட்டார். இந்தநிலையில் மதுரையில் சரண்யா வசித்து வந்தபோது, கடந்த 2019-ம் ஆண்டில் போலீஸ் பணிக்கு தனியார் நிறுவனம் நடத்திய பயிற்சி வகுப்பில்  சரண்யா பங்கேற்றார். அந்த பயிற்சி வகுப்புக்கு திருமுருகனும் சென்றார். அப்போது திருமுருகனுக்கும், சரண்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதற்கிடையே போலீஸ் வேலை கிடைத்து, மதுரை ஆயுதப்படையில் திருமுருகன் பணியில் சேர்ந்தார்.ஆனால், சரண்யாவுக்கு போலீஸ் துறையில் வேலை கிடைக்கவில்லை. அவருக்கு வனத்துறையில் வேலை கிடைத்தது. அதன்படி தேனி வனச்சரக அலுவலகத்தில் வனக்காவலராக சரண்யா வேலைக்கு சேர்ந்தார். போடி வனத்துறை அலுவலகம் அருகே உள்ள வாடகை வீட்டில் சரண்யா மட்டும் தனியாக வசித்து வந்தார். அவருடைய 2 மகள்களும் மதுரை யாகப்பாநகரில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகின்றனர். போலீஸ் துறை மற்றும் வனத்துறையில் பணிபுரிந்தாலும் இவர்களுக்கிடையேயான கள்ளக்காதல் நீடித்தது. இதனால் திருமுருகன் அடிக்கடி போடிக்கு வந்து சரண்யா வீட்டில் தங்கி செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதையறிந்த திருமுருகனின் மனைவி கோபித்து கொண்டு, அவருடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சரண்யா வீட்டுக்கு திருமுருகன் வழக்கம்போல வந்தார். அப்போது, அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சரண்யா வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
இதில் ஆத்திரமடைந்த திருமுருகன், சரண்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு மதுரைக்கு சென்று கீரைத்துறை போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே போடி போலீசார் திருமுருகனை போடிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார். கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் வனக்காவலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் போடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

Tags : False love affair with female forest ranger-armed guard ends in murder.

Share via