12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான கேதார்நாத். கோயில் திறப்பு! ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

by Editor / 17-05-2021 10:46:50am
12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான கேதார்நாத். கோயில் திறப்பு! ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று கேதார்நாத். உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள, கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது இந்தப் புனிதத் தலம். கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு தலங்களும் மிகவும் புனிதமான தலங்களாகக் கருதப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும், இந்தத் தலங்கள் பனிப்பொழிவு காரணமாக ஆறுமாதங்கள் மூடப்பட்டிருக்கும். அதாவது அட்சயதிருதியையை ஒட்டித் திறக்கப்படும் இந்தக் கோயில்கள் தீபாவளிவரை திறந்திருக்கும். அதன்பின் ஆறுமாத காலங்கள் பனிப்பொழிவு காரணமாக மூடப்படும். இந்த ஆண்டு கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய தலங்கள் மே 14-ம் தேதி திறக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ம் தேதி மூடப்பட்ட கேதார்நாத் ஆலயம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
பத்ரிநாத் கோயில் நாளைக்காலை (மே 18) பிரம்ம முகூர்த்தத்தில் 4.15 மணிக்குத் திறக்கப்பட உள்ளது. இது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாலும் கோவிட் பரவல் காரணமாக பக்தர்கள் யாரும் தரிசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என உத்தராகண்ட் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சார்தாம் யாத்திரை எனப்படும் புனிதப்பயணம் கோவிட் பரவல் காரணமாகத் தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆலயங்களில் வழக்கமாக நடைபெற வேண்டிய வழிபாடுகள் மட்டுமே நடைபெறும். பக்தர்கள் தரிசிக்க அனுமதியில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உத்தராகண்ட் முதல்வர் திரத்சிங் ராவத் தன் ட்விட்டர் பக்கத்தில், "கேதார்நாத் கோயில் இன்று காலை 5 மணிக்குத் திறக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டன. பாபா கேதார்நாத் அனைவருக்கும் நல் ஆரோக்கியத்தை அருளுமாறு வேண்டிக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
ஆலயங்களைத் திறப்பதற்கான பணிகள் கடந்த ஒரு வாரமாகவே நடைபெற்று வந்தன. ஆலயத்தின் மீது படர்ந்திருந்த பனி அகற்றப்பட்டு ஆலய வளாகம் சுத்தம் செய்யப்ப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் அந்தப் பகுதி மலைத்தொடர்களில் சூரிய ஒளி படரும் அழகைக் காண்பது சிலிரிப்பூட்டும் காட்சியாகும். சார்தாம் யாத்திரையும் இறைதரிசனமும் பக்தர்கள் மனதுக்கும் உடலுக்கும் மிகவும் உற்சாகம் தருபவை. சீக்கிரம் இந்த நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே பக்தர்களின் வேண்டுதலாக உள்ளது.

 

Tags :

Share via