அரசுப்பள்ளிகள் மீதுஅவதூறு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கோரிக்கை.

by Editor / 26-04-2022 08:38:36am
 அரசுப்பள்ளிகள் மீதுஅவதூறு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கோரிக்கை.

அரசுப்பள்ளிகள் மீதுஅவதூறு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்க  மாநிலத்தலைவர்  பி.கே.இளமாறன் அறிக்கை.

  இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக,குறிப்பாக. கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்கள்அறிவித்து அரசுப்பள்ளிகளையும் மாணவர்களையும் மேம்படுத்தும் நோக்கத்தோடு  மாண்புமிகு. முதலமைச்சர் செயல்பட்டுவருகிறார்.
   
  அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் தொடர்ந்து பொறியியல் கல்லூரியிலும் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியது பெண்கல்வி ஊக்குவிக்கும் வகையில் ஏழை,எளிய குடும்பங்களிலிருந்துதான் பெரும்பாலோர் அரசுப்பள்ளிகளில் படிக்கிறார்கள் என்பதை உணர்ந்து அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வித்தொடரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 போன்ற அறிவிப்பின்மூலம் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.எதிர்காலத்தில் அனைத்திலும் முதன்மைப்பெறப்போகிறவர்கள் அரசுப்பள்ளியில் படித்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

  கடந்த ஆண்டில் மட்டும் ஐந்தரை லட்சம் புதிய மாணவர்கள் சேர்ந்தார்கள். எதிர்வரும் ஆண்டில் இருமடங்காக உயரும் நிலை உருவாகும். நிலைமை இவ்வாறிருக்க சமீபகாலமாக சமூகவலைதளங்களில் அரசுப்பள்ளிகளையும் அங்கு படிக்கும் மாணவர்களை தவறான செய்கையில் ஈடுபடுவது போன்று வீடியோ எடுத்து பரப்பிவருவதன்மூலம் அரசுப்பள்ளிகளையும் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கும் வகையில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்  கேட்டுக்கொள்கிறேன். மேலும் கொரோனா ஏற்படுத்திய தாக்கம்  எங்கோ ஒரு சில மாணவர்களின் செயல் வருந்தத்தக்கது. அம்மாணவர்களை நாங்கள் மீண்டும் நல்லநிலைக்கு கொண்டுவந்துவிடுவோம். ஆனால் அதை வீடியோ எடுத்து பரப்புவதனால் மாணவனின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கிவிடுகிறார்கள்.


      அரசுப்பள்ளிகள் மீது அவதூறு பரப்பியும் அங்கு படிப்பவர்கள் ஒழுங்கீனமானவர்கள் மாதிரி சித்தரித்து அல்லது தூண்டுதலால்  ஒரு சிலரால் திட்டமிட்டு பரப்புகிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது . மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ள நிலையில் பெற்றோர்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோக்கள் வெளியிடுகிறார்கள்.அரசுப்பள்ளிகள் தான்  அடிமட்ட மக்களின் அடையாளம். அரசுப்பள்ளிதான் சிறப்பான குடிமகன்களை உருவாக்கும் அறிவாலயம். ஆகையால்,அரசுப்பள்ளிகள் மீது சேற்றை வாரிப்பூசும் வீடியோக்கள் எடுத்து சமூகவலைதளங்களில் பரப்புவோர் மீதும் பகிர்வோர் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Tags : Request to the Chief Minister to take stern action against those who spread slander on public schools.

Share via