நடிகர் சந்தானத்தின் உறவினர்  பெண் கொலை:  கூலிப்படையினர் கைது  வெளிநாட்டு கணவர் மீது வழக்கு 

by Editor / 23-05-2021 06:40:24pm
 நடிகர் சந்தானத்தின் உறவினர்  பெண் கொலை:  கூலிப்படையினர் கைது  வெளிநாட்டு கணவர் மீது வழக்கு 



திருவாரூர் மாவட்டத்திலுள்ள கிடாரங்கொண்டான் கிராமத்தைச் சார்ந்தவர் சிதம்பரம். இவரது மகள் ஜெயபாரதி. இவர் நடிகர் சந்தானத்தின் தூரத்து உறவினர் என்று கூறப்படுகிறது. ஜெயபாரதிக்கும் - கும்பகோணத்தை சேர்ந்த அமெரிக்க மாப்பிள்ளையான விஷ்ணு பிரகாஷ் என்பவருக்கும் கடந்த 2013 ஆம் வருடம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா மாகாணத்தில் வசித்துவந்த தம்பதிக்கு பெண் குழந்தை உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக மனைவி மற்றும் குழந்தைகளை விஷ்ணு பிரகாஷ் அமெரிக்காவிலிருந்து திருவாரூரில் உள்ள தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
தாய் வீட்டில் வசித்து வந்த ஜெயபாரதி அஞ்சல் துறையில் தற்காலிக கிளர்க்காக பணியாற்றி வந்த நிலையில், சம்பவத்தன்று பணிக்குச் சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பியபோது ஜெயபாரதி மீது ஏ.டி.எம் பணம் நிரப்பும் வாகனம் மோதி உடல் நசுங்கி உயிரிழந்தார்.
 இந்த விபத்தை நேரில் பார்த்த சிலர் ஜெயபாரதியின் சகோதரரிடம் அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கவே, ஜெயபாரதி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய வாகனம் தொடர்பாக விசாரிக்கையில், சம்பவத்திற்கு இரு தினங்களுக்கு முன்னதாக விபத்து காரணமாக வாகனத்தை கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் விலைகொடுத்து இருவர் வாங்கி இருப்பதும் கண்டறியப்பட்டது.
மேலும், காலையில் ஜெயபாரதி பணிக்கு செல்லும்போது அவரை பின்தொடர்ந்து வாகனம் சென்ற சி.சி.டி.வி காட்சிகளும் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக புகார் அளித்தும் காவல் துறையினர் விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, உறவினரான நடிகர் சந்தானத்திற்கு இதுதொடர்பான தகவல் தெரிவிக்கவே, சந்தானம் அரசியல் நண்பர் மூலமாக காவல்துறை உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்து வழக்கு பதிவு செய்ய வைத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக மறுவிசாரணை செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஜெயபாரதி அண்மையில் அமெரிக்காவில் உள்ள தனது கணவருக்கும், அவர் பணிபுரியும் அலுவலகத்திற்கும் விவாகரத்து நோட்டீஸ் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இந்த நோட்டீசால் அவரது வேலைக்கும் சிக்கல் ஏற்பட்டுவிடவே, நோட்டீசை வாபஸ் பெறக்கோரி விஷ்ணு பிரகாஷ் குடும்பத்தினர் ஜெயபாரதியை கடுமையாக மிரட்டியதாகவும், ஜெயபாரதி புகாரை வாபஸ் பெற மறுத்ததால் கூலிப்படையை ஏவி அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், இந்த விஷயம் தொடர்பான வழக்கில் காரின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் செந்தில்குமார் மற்றும் வாகன ஓட்டுநர் பிரசன்னா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெயபாரதியின் கணவர் விஷ்ணு பிரசாத், மைத்துனர் செந்தில்குமார், உறவினர்கள் ஜெகன், ராஜா ஆகியோர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிறரை தேடி வரும் நிலையில், அமெரிக்காவில் உள்ள விஷ்ணு பிரசாத்தை அங்கிருந்து தமிழகத்திற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கை கொலை வழக்காக திருவாரூர் காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via