கோத்தகிரி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலியானார்.

by Editor / 02-07-2022 05:12:34pm
கோத்தகிரி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலியானார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சோலூர் மட்டம் போலீஸ் நிலையத்தில் கடந்த சுமார் 3 ஆண்டுகளாக சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் முகமது ரபீக்(வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் முகமது ரபீக் இன்று காலை வழக்கு சம்பந்தமாக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக போலீஸ்காரர் அபுதாகீர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். தொடர்ந்து அவர்கள் விசாரணையை முடித்து விட்டு, கடைவீதியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகைக்கு சென்றனர். பின்னர் சோலூர் மட்டம் போலீஸ் நிலையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை சப்-இன்ஸ்பெக்டர் முகமது ரபீக் ஓட்டினார்.

கோடநாடு செல்லும் வழியில் கேர்பெட்டா செம்மண் முடக்கு பகுதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பணிக்காக ஜல்லிக்கற்கள் கொட்டி வைக்கப்பட்டு இருந்தது. அந்த வழியாக வந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்து ஜல்லிக்கற்கள் மீது ஏறியது. தொடர்ந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேரும் சாலையில் விழுந்தனர்.

அப்போது எதிரே தேயிலைத்தூள் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி சக்கரத்தில் முகமது ரபீக் சிக்கினார். அவர் மீது சக்கரம் ஏறி இறங்கியது. இதனலர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே முகமது ரபீக் பரிதாபமாக உயிரிழந்தார். அபுதாகீர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, முகமது ரபீக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை பார்த்து சக போலீசார் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. மேலும் சம்பவம் குறித்து கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

விபத்தில் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் முகமது ரபீக், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை தனிப்படை விசாரிப்பதற்கு முன்பு விசாரித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது குடும்பத்தினருக்கு ஊட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆறுதல் கூறினார்.

 

Tags :

Share via