கந்த சஷ்டி திருவிழா பக்தர்கள் தங்க தற்காலிக கொட்டகைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்

by Staff / 16-10-2022 01:10:03pm
  கந்த சஷ்டி திருவிழா பக்தர்கள்  தங்க தற்காலிக  கொட்டகைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்

 உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு விரதமிருக்கும் பக்தர்கள் தங்குவற்காக தற்காலிக கொட்டகைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில்  ஒன்றான கந்த சஷ்டி திருவிழா வரும் 25-ம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் வரும் 30-ம் தேதி கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது. கந்த சஷ்டி திருவிழாவில் தமிழகம் மட்டுமன்றி பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவில் வளாகம் மற்றும் விடுதிகளில் தங்கி விரதம் மேற்கொள்வார்கள்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கந்த சஷ்டி திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ளவும் கோவிலில் தங்கி விரதம் மேற்கொள்ளவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.  மேலும் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரமும் பக்தர்கள் அனுமதி இன்றி நடைபெற்றது.  இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் அனுமதியுடன் கந்த சஷ்டி திருவிழா நடைபெற இருப்பது பக்தர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால்  வழக்கத்தை விடவும் கூடுதலாக  பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனை முன்னிட்டு  திருவிழாவிற்கான  அடிப்படை வசதிகள்,  பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பக்தர்கள்  தங்கி விரதம் இருப்பதற்கான தற்காலிக  கொட்டகைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பக்தர்கள் வரிசைகளில் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கான தரிசன வரிசைகளும் தடுப்புகள் மூலம் அமைக்கப்பட்டுவருகிறது.இந்த பணிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
 

 

Tags :

Share via