இபிஎஸ்-ன் துரோகம்; மக்களின் தண்டனை - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

by Staff / 19-10-2022 04:32:14pm
இபிஎஸ்-ன் துரோகம்; மக்களின் தண்டனை - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை தலைமைச் செயலகத்தில் மூன்றாவது நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் சத்தமும் - மக்களின் மரண ஓலமும் ஒலித்துக் கொண்டிருந்த காட்சி இன்றும் என் மனதை வாட்டிக் கொண்டு இருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் குற்றம்சாட்டிய 17 அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; நேரடியாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட ஆய்வாளர் உட்பட 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை அதிமுக அரசு உரிய முறையில் கையாளவில்லை.

எடப்பாடி பழனிசாமியின் துரோகங்களும் தவறுகளும், அவரது அரசியல் வாழ்க்கையை அறிந்த அனைவருக்கும் தெரியும். நான் அதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை; இதற்கான தண்டனையைதான் தேர்தல் மூலம் மக்கள் அதிமுகவுக்கு வழங்கினார்கள். கடப்பாரையை விழுங்கிவிட்டு கசாயம் குடித்துவிட்டேன் என்று கூறும் பழமொழியை விட மிகப்பெரிய பொய் இது. பெரிய பொய்யை பழனிசாமி அன்றைய தினம் சொன்னார்; அவர் சொன்னது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர்கள் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையமே சொல்லி விட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; யார் யார் குற்றவாளிகளோ, அவர்கள் கூண்டில் ஏற்றப்படுவார்கள்.

சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியதை அடிப்படையாகக் கொண்டு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஏற்கனவே வழங்கிய நிதியோடு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் சேர்த்து வழங்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

 

Tags :

Share via