தன்னிகரற்ற மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Editor / 02-07-2021 05:03:57pm
தன்னிகரற்ற மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் பின்தங்கிய சமூகம், பின்தங்கிய மக்கள் என யாரும் இருக்கக்கூடாது என்ற நிலையை எட்ட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.இதற்காக ஒவ்வொரு துறையிலும் திட்டமிடவேண்டும் என்று அவர் கூறினார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (2- ந் தேதி) தலைமைச் செயலகத்தில், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் ஒரே சீரான மேம்பாடு அடைந்த பகுதிகளாக மாறவேண்டும் என்றும், பின்தங்கிய சமூகம், பின்தங்கிய மக்கள் என்று யாரும் இருக்கக்கூடாது என்ற வகையில் ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள் ஆனாலும் கரையாத, நிலையான வளர்ச்சியை தமிழ்நாடு அடையவேண்டும் என்றும் அதற்கான திட்டமிடுதல்கள் ஒவ்வொரு துறையிலும் தேவை என்றும் உரையாற்றினார்.

மேலும், பொருளாதார வளர்ச்சியும், சமூக நலத் திட்டங்களும் ஒன்றுக்கொன்று கைகொடுத்து செயல்பட்டதால்தான், தமிழ்நாடு வளர்ச்சி அடைந்தது என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்துப் பாராட்டியுள்ளதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

‘தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது ஏற்றுமதி, இறக்குமதி மட்டும் அல்ல நிதி மூலதனம் அல்ல, - வளர்ச்சி என்பது அனைத்துத் தரப்பு மக்களின் வளர்ச்சியாக இருக்கவேண்டும். மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு, தமிழ்நாடு அரசு செல்லவேண்டிய பாதைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழவேண்டும்’ என்றும், மாநிலத்தின் வளர்ச்சிக்கான நல்வழியினைக் காட்ட வேண்டுமென்றும் கூட்டத்தில் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.முன்னதாக இக்கூட்டத்தில் வரவேற்றுப் பேசிய மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், இந்தக் குழுவின் செயல்பாடுகள் குறித்தும், பல்வேறு திட்டங்கள் குறித்தும்  எடுத்துரைத்தார்.

 

Tags :

Share via