மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

by Staff / 20-02-2023 04:28:03pm
மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களுள் ஒருவர் மோகன்லால். மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் 350 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள மோகன்லால், தமிழில் நடிகர் விஜய்யுடன் நடித்த  ‘ஜில்லா’  திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.பிப்ரவரி 17 ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியிலுள்ள, நடிகர் மோகன்லால் வீட்டிற்கு வந்த வருமான வரித்துறையினர், அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தி பல்வேறு ஆவணங்களையும் ஆய்வு செய்துள்ளனர். சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விசாரணையின் பின்னணி என்ன.கேரளாவில் 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரபல  சினிமா தயாரிப்பாளர்கள் ஆண்டனி பெரும்பாவூர், ஆண்டோ ஜோசஃப், லிஸ்டின் ஸ்டீஃபன், நடிகரும் தயாரிப்பாளருமான பிரித்விராஜ் உள்ளிட்டோரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். பல நாட்கள் நடைபெற்ற இந்த சோதனை தொடர்பான விவரங்களை வருமான வரித்துறை அப்போது வெளியிடவில்லை என்றாலும், வெளிநாட்டு சொத்துக்குவிப்பு தொடர்பாக சோதனை நடைபெற்றதாக கூறப்பட்டது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற சோதனையின் மூலம், மலையாள சினிமாவில் 225 கோடி ரூபாய் கருப்புப்பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்மூலம் வருமான வரித்துறைக்கு 72 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பிரபல தயாரிப்பாளர்கள் பலர் வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல திரைப்படங்களை வெளிநாடுகளுக்கு விநியோகம் செய்வதிலும் பெரும் மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ள பல தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வருமான வரித்துறையினரின் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் பிரபல தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூரும், நடிகர் மோகன்லாலும் மிக நெருங்கிய நண்பர்கள் என கூறப்படுகிறது. நடிகர் மோகன்லாலின் பல பிரம்மாண்ட திரைப்படங்களை ஆண்டனி பெரும்பாவூரே தயாரித்துள்ளார். அதனடிப்படையில் டிசம்பர் மாதம் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையை அடிப்படையாகக் கொண்டு, பிப்ரவரி 17 ஆம் தேதி நடிகர் மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து, அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நடிகர் மோகன் லாலுக்கும், ஆண்டனி பெரும்பாவூருக்கும் இடையே உள்ள வணிக ரீதியான பணப்பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், பரிவர்த்தன்னைகள் தொடர்பான சில ஆவணங்களை கைப்பற்றிச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறையினர் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையும், முந்தைய சோதனைகள் தொடர்பான விவரங்களும் மலையாளத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via