ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காணவந்த ரசிகர்களின் வாகனங்கள் திருட்டு

by Staff / 01-05-2023 05:27:33pm
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காணவந்த ரசிகர்களின் வாகனங்கள் திருட்டு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காணவரும் ரசிகர்களின் இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக, அண்ணா சதுக்கம் காவல் நிலையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து திருவல்லிக்கேணி துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் - சென்னை சூப்பர் கிரிக்கெட் போட்டியைக் காண வந்த ரசிகர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றனர். அப்போது போலீஸார் வெளியே நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களைத் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அந்த நேரத்தில் அடையாளம் தெரியாத இருவர், மைதானம் அருகே நிறுத்தி வைத்திருந்த புல்லட் மோட்டர் சைக்கிளைப் பூட்டை உடைத்து திருட முயன்றதைப் பார்த்தனர். அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த மணி(40), திருநெல்வேலியைச் சேர்ந்த சுரேஷ்ராஜன்(55) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட புல்லட்டை திருடி பல்வேறு ரயில்வே பார்க்கிங்கில் நிறுத்தி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.புல்லட்டை மட்டுமே திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ள இவர்கள் பிழைப்பு தேடி சென்னைக்கு வந்த போது சரியான வேலை கிடைக்காத நிலையில், திருட்டு தொழிலில் ஈடுபட்டனர். அத்துடன் திருடிய வாகனங்களை ஒவ்வொன்றாக விற்க முயன்றதும் தெரியவந்தது. அவர்கள் அளித்த தகவலின் பேரில், ரயில்வே பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 புல்லட்டுகளை பறிமுதல் செய்தனர். இதன் பின் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via