பெண் நிர்வாகியிடம் போலீசார் விசாரணை

by Staff / 05-07-2023 05:28:35pm
பெண் நிர்வாகியிடம் போலீசார் விசாரணை சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல். இவர் தனது உறவினர்கள் தங்கபழம், பிரேம் ஆனந்த், சரண்யா ஆகியோருடன் சேர்ந்து அமுதசுரபி சிக்கன மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் என்ற பெயரில் கூட்டுறவு வங்கி தொடங்கினர். இதில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறினர். இதை நம்பி சேலம் மாவட்டத்தை சேர்ந்த பலர் முதலீடு செய்தனர். முதலீடு அதிகம் வருவதை அறிந்த இவர்கள் பல்வேறு மாவட்டங்களில் கிளை தொடங்கினர். இதையடுத்து ஏராளமானவர்கள் முதலீடு செய்தனர். இந்த நிலையில் முதலீடு செய்தவர்களுக்கு உரிய நேரத்தில் திரும்ப பணம் வழங்கவில்லை. இதனால் முதலீடு செய்தவர்கள் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது அலுவலகம் மூடப்பட்டு இருப்பது தெரிந்தது. மேலும் போலியான கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கி பணம் மோசடி நடந்தது தெரிந்தது.<br /> இதையடுத்து சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த பாஸ்கரன் உள்பட பலர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்களிடம் ரூ. 58 கோடி முதலீடு பெற்று அதை மோசடி செய்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து ஜெயவேல், இயக்குனர் தங்கபழம், அலுவலர் கண்ணன் ஆகிய 3 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த இந்த நிறுவன பெண் நிர்வாகி சரண்யாவை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சரண்யாவை காவலில் எடுத்து விசாரணை நடத்த கோவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதன்படி 2 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சரண்யாவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
 

Tags :

Share via