கால்நடைகளின் தீவன தேவையை பூர்த்தி செய்ய உலர் தீவனங்களை இருப்பு வைக்கும் விவசாயிகள்

by Admin / 29-07-2021 04:33:37pm
கால்நடைகளின் தீவன தேவையை பூர்த்தி செய்ய உலர் தீவனங்களை இருப்பு வைக்கும் விவசாயிகள்



   
நேப்பியர் புல், குதிரை மசால், முயல் மசால் உள்ளிட்ட பசுந்தீவனங்களை விளைநிலங்களிலேயே சாகுபடி செய்து கால்நடைகளுக்கு விவசாயிகள் வழங்கி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் பகுதியில் விவசாயம் மற்றும் அதை சார்ந்து கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கால்நடை வளர்ப்பு மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. கால்நடைகளின் தீவனத்தேவையை பூர்த்தி செய்வதற்காக தீவன சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் அதனை உலர் தீவனமாக விளைநிலங்களிலேயே இருப்பு வைத்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:

கால்நடைகளுக்கு நல்ல சத்தான சரிவிகித உணவுகளை வழங்குவதன் மூலமே உற்பத்தியை அதிகரிக்க முடியும். குறிப்பாக கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், அடர் தீவனம், உலர் தீவனம் ஆகியவற்றை சரியான விகிதத்தில் வழங்குவதன் மூலம் பால் உற்பத்தி அதிகரிக்கிறது. அடர் தீவனங்கள் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனாலும் பால் உற்பத்தியை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட அளவில் பசுக்களுக்கு வழங்கி வருகிறோம்.

மேலும் நேப்பியர் புல், குதிரை மசால், முயல் மசால் உள்ளிட்ட பசுந்தீவனங்களை விளைநிலங்களிலேயே சாகுபடி செய்து கால்நடைகளுக்கு வழங்கி வருகிறோம். தண்ணீர் பற்றாக்குறையான காலங்களில் உலர் தீவனங்களை இருப்பு வைப்பது அவசியமாகிறது. அந்தவகையில் நெல் அறுவடைக்கு பின் கிடைக்கும் வைக்கோல் மற்றும் சோளம், மக்காச்சோள தட்டைகளை நன்கு உலர வைத்து இருப்பு வைக்கிறோம்.

தற்போது இந்த பகுதியில் தண்ணீர் இருப்பு திருப்தியாக இருந்ததால் தீவன கம்பு பயிரிட்டிருந்தோம். அவற்றை சரியான பருவத்தில் அறுவடை செய்து விளைநிலங்களிலேயே உலர வைத்து இருப்பு வைத்துள்ளோம் என்றனர்.

 

 

Tags :

Share via