நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் சோனியா - 20-ந் தேதி ஆலோசனை

by Admin / 13-08-2021 12:39:53pm
நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் சோனியா - 20-ந் தேதி ஆலோசனை

ஆகஸ்டு 20-ந் தேதி முக்கிய தலைவர்கள் சந்திப்பு நிகழாவிட்டால் அடுத்த மாதம் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சோனியா விருந்து கொடுக்க முடிவு செய்து உள்ளார்.

நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் சோனியா - 20-ந் தேதி ஆலோசனை
சோனியா காந்தி

பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ந் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது.

ஆனால் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியதால் சபை நடவடிக்கைகள் 80 சதவீதம் நடைபெறவில்லை.

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் பாராளுமன்றத்தில் ஓரணியில் திரண்டு போராடியதால் பா.ஜனதா திணறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. இதைபுரிந்து கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்க்கட்சிகளை ஓரணியில் தக்க வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது.

இதற்கிடையே காங்கிரஸ் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே நாடுமுழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி ஓரணிக்குள் கொண்டு வரும் முயற்சிகளை காங்கிரஸ் தலைவர் சோனியா தொடங்கி உள்ளார்.

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்-மந்திரிகள் தவிர பா.ஜனதா அல்லாத மற்ற மாநில முதல்-மந்திரிகளையும் தங்களுக்கு ஆதரவாக கொண்டு வரும் முயற்சிகளை சோனியா எடுத்து வருகிறார். இதற்காக வருகிற 20-ந் தேதி நாடுமுழுவதும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களிடம் சோனியா பேச திட்டமிட்டு உள்ளார்.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் சோனியா அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் அன்று தொடர்பு கொள்வார் என்று தெரிகிறது. மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை இந்த வீடியோ கான்பரன்சிங் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

முக ஸ்டாலின்

தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார். ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்கள் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில் எதுபற்றி ஆலோசிக்கப்படும் என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

ஆனால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு போராடியதால் அந்த போராட்ட உணர்வை பா.ஜனதாவுக்கு எதிராக திருப்ப சோனியா நாடுமுழுவதும் உள்ள முக்கிய தலைவர்களை ஒன்று திரட்டுவதாக தெரிய வந்துள்ளது. 20-ந் தேதி முக்கிய தலைவர்களை அவர் நேரில் சந்திப்பார் என்றும் தெரிய வந்துள்ளது.

வருகிற 20-ந் தேதி முக்கிய தலைவர்கள் சந்திப்பு நிகழாவிட்டால் அடுத்த மாதம் (செப்டம்பர்) முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சோனியா விருந்து கொடுக்க முடிவு செய்து உள்ளார். மதிய உணவு அல்லது இரவு நேர உணவு கொடுத்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் அவர் மனம் விட்டு பேசுவார் என்று தெரிகிறது.

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக காங்கிரசை வலுப்படுத்தவும், அனைத்து எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் தலைமையில் ஓரணியில் திரட்டவும் இந்தக்கூட்டத்தை பயன்படுத்திக்கொள்ள சோனியா திட்டமிட்டு உள்ளார்.
 

 

Tags :

Share via