வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் குடும்பம் பலே மோசடி!

by Admin / 29-08-2021 06:01:55pm
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் குடும்பம் பலே மோசடி!



வெளிநாட்டில் படிக்க வைத்து வேலை வாங்கித் தருவதாக கூறி அரசு தலைமை ஆசிரியரை  மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
 
சென்னை துரைப்பாக்கத்தில் வசித்து வருபவர் பிரகாசி பெல்ரமைன். இவர் மதுரையில் அரசுப் பள்ளி ஒன்றில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ரூபன் ப்ராங்ளின் திண்டுக்கல் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

 சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரகாசி பெல்ரமைன் புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில் தனது கணவரின் சகோதரர் ஜான் ரிச்சர்ட் மற்றும் மனைவி ஜெயந்தி மற்றும் அவர்களது மருமகன் அஸ்வின் ஆகியோர் சேர்ந்து மோசடி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

அஸ்வின் என்பவர் வெளிநாட்டில் படிப்பிற்கு சீட் வாங்கிக் கொடுத்து வேலையும் வாங்கித் தரும் நிறுவனம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தி வருவதாக கூறி பணத்தை மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார்.

அஸ்வின் என்பவருக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தொடர்பு அதிகம் இருப்பதாகவும், மேலும் அஸ்வின் மனைவி யுனைடெட் கிங்டம்மில் மேற்படிப்பு படித்து,துபாயில் கன்சல்டன்சி நிறுவனத்தி வேலைபார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

 வெளிநாட்டில் இருக்கும் மருமகன் அஸ்வினுக்கு பதிலாக இந்தியாவில் ஜான் ரிச்சர்ட் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி ஆகியோர் மாணவர்களிடம் பணம் வசூலித்து நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

அதன்படி தனது இரண்டாவது மகளுக்கு இங்கிலாந்து அல்லது துபாயில் கல்வியோடு வேலையும் வாங்கித் தருவதாகக் கூறி, 2016ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு காரணங்களை கூறி தவணை முறையில் ஒரு கோடியே 61லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார்

. தனது மகளுக்கு கல்வியும் மற்றும் வேலையும் வாங்கித் தராததால் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்ட போது, துரைப்பாக்கத்தில் உள்ள வீட்டை வாங்கிய பணத்திற்கு பதிலாக எழுதிக் கொடுப்பதாக தெரிவித்து மீண்டும் மோசடியில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக அந்த வீட்டின் பெயரில் 75 லட்ச ரூபாய் வங்கியில் கடன் வாங்கி இருப்பதை மறைத்து தன்னை ஏமாற்ற முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். எனவே தனது மகளுக்கு வெளிநாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை வாங்கித் தருவதாக கூறி ஒரு கோடியே 61 லட்சம் மோசடி செய்த,

 ஒரே குடும்பத்தை சேர்ந்த  ஜான் ரிச்சர்ட் மற்றும் ஜெயந்தி அவர்களின் மருமகன் அஸ்வின் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்த 3 பேர் மீதும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று எத்தனை மாணவர்களை மோசடி செய்துள்ளார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via