சண்டக்கோழியோடு சண்டை போட்டவர்!

by Staff / 17-11-2018 / 0 comments
சண்டக்கோழியோடு சண்டை போட்டவர்!

சண்டக்கோழி-2 படத்தில் வரலட்சுமியின் மைத்துனராக, விஷாலோடு மல்லுக்கட்டும் கேரக்டரில் நடித்து யார் இவர்? என்று ரசிகர்களால் கவனித்து கேட்கப்படும் நடிகர் அர்ஜெய். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே விஷாலின் நான் சிகப்பு மனிதன் மூலமாகத்தான் சினிமாவுக்கு இவர் அறிமுகமானார். சண்டக்கோழி-2 வெளியானதில் இருந்தே போனை வைக்க முடியாத அளவுக்கு பாராட்டு மழையில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார். படத்துக்கு விமர்சனம் எழுதிய ஊடகங்களும் அர்ஜெய்யை கவனித்துப் பாராட்டியிருக்கின்றன.

சண்டக்கோழியோடு சண்டை போட்டவர்!

அண்ணன் விஷால் மூலமாகத்தான் சினிமாவுக்கு வந்தேன் என்றாலும், நான் சண்டக்கோழி-2 படத்தில் நடிக்க அவரிடம் வாய்ப்பு கேட்கவில்லை. அந்தப் படத்துக்கு நடிகர்கள் தேர்வு நடைபெறுகிறது என்று நண்பர் ஒருவர் மூலம் அறிந்தேன். ஆடிஷனில் நானும் பங்கு பெற்றேன். என்னை இயக்குநர் லிங்குசாமி தேர்வு செய்தார். அதன்பிறகுதான், அண்ணே, நானும் உங்க படத்துலே இருக்கேன் என்று விஷாலுக்கு சொன்னேன். நான் வில்லனாக செலக்ட் ஆனதற்கு அவர் ரொம்பவும் சந்தோஷப்பட்டார். நல்லபடியா பண்ணுப்பான்னு வாழ்த்தினார் என்று பரவசமாகப் பேச ஆரம்பிக்கிறார் அர்ஜெய். படப்பிடிப்பு அனுபவம் எப்படி இருந்தது? இந்தப் படத்துக்காக சுமார் எழுபது நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஆரம்பத்தில் நடிப்பது பற்றிப் பெரிதாகப் பேசாமல் தானுண்டு நடிப்புண்டு என்றிருந்த விஷால் அண்ணன், என் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும்போது நன்றாகச் செய்யப் பெரிதும் ஊக்கப்படுத்தினார். குறிப்பாக அந்தப் பஞ்சாயத்துக் காட்சியில் என் நடிப்பு சிறப்பாக அமைய பெரிதும் அக்கறை காட்டினார். வரலட்சுமி எனக்கு நல்ல நண்பர். ஐந்து ஆண்டுகளாகத் தெரியும். அதனால் அவருடன் நடிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ராஜ்கிரண் என்கிற பெரிய நடிகருடன் நடிப்பது எப்படி, திரையில் அவர் வந்துவிட்டால் அவர் மட்டும் தானே தெரிவார் என்றெல்லாம் பயம் எனக்குள் இருந்தது. ஆனால் அவர் என்னுடன் சகஜமாகப் பேசி என்னை ஊக்கப்படுத்தினார். நான் மட்டுமல்ல, எல்லாரும் அந்தப் பஞ்சாயத்து காட்சியை பெரிதும் பலமாக எண்ணியிருந்தோம். அதை மட்டுமே மூன்று நாட்கள் எடுத்தார்கள். முதல்நாள் படப்பிடிப்பு முடிந்ததும் எனக்கு நாம் சரியாகச் செய்தோமா என்று பயமாக இருந்தது. மறுநாள் ராஜ்கிரண் சார் என்னை தம்பி இங்கே வா என்று கூப்பிட்டார். நேற்று என்னை எதிர்த்து திமிராகப் பேசியது நன்றாக இருந்தது. ஆனால் அந்த தெனாவெட்டு போதாது. மேலும் வீரியமாக இருக்க வேண்டும் என்று கூறி ஊக்கப்படுத்தினார். அதன்படி நடித்தேன். இப்போது எல்லாரும் பாராட்டுகிறார்கள். தன்னுடன் நடிக்கும் சக நடிகன் அறிமுக நிலையில் இருந்தாலும் பாராட்டி, ஊக்கம் தந்த அவரது பெருந்தன்மை வியக்க வைத்தது. உடம்பை ஜம்முன்னு ஏத்தி வெச்சிருக்கீங்க சாப்பிட மறந்தாலும் உடற்பயிற்சி செய்ய மறக்கமாட்டேன். 365 நாளும் ஜிம்முக்கு போவேன். சண்டக்கோழி-2யில் என்னுடைய தோற்றத்தை கம்பீரமாக மாற்றிக் காட்ட தினமும் முப்பது முட்டை, இரண்டு கிலோ வேக வைத்த கோழிக்கறியை தொடர்ச்சியாக சாப்பிட்டேன். அரிசி உணவை சுத்தமா தவித்துவிடுவேன். இதுதான் என் உடற்கட்டின் ரகசியம். சினிமாவில் உங்கள் லட்சியம்? வில்லனா மட்டுமில்லாமல் பிரகாஷ்ராஜ் சார் மாதிரி கேரக்டர் ரோலிலும் நடிக்கணும் என்பது என்னுடைய விருப்பம். அதற்குமுன் வில்லனா பேர் வாங்கணும். வில்லன் வேடமா கூப்பிடுப்பா அர்ஜெய்யை என்று சொல்ல வைக்க வேண்டும். அந்த இடத்தை அடைவதுதான் என்னுடைய இப்போதைய லட்சியம். ஹீரோ ஆசை இல்லவே இல்லையா? சத்தியமா அப்படியொரு ஐடியா இல்லை. நான் சிகப்பு மனிதன் படம் வெளிவந்த போதே ஹீரோவா நடிக்க வாய்ப்பு வந்தது. என்னுடைய ரூட் வில்லன் வேடங்கள் என்பதால் மறுத்துவிட்டேன். அடுத்து? பிரபுதேவா சாருடன் தேவி-2 பண்றேன். இந்தப் படத்தின் சில பகுதிகளை மொரீஷியஸில் எடுத்தார்கள். இந்தப் படம் எனக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. நான் எத்தனையோ படங்களில் துணிச்சலாக நடித்துள்ளேன். ஆனால், இந்தப் படத்தில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். அது ஒரு மிகப் பெரிய மலை உச்சி. கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலை. அங்கு நானும் பிரபு மாஸ்டரும் மோதும் சண்டைக் காட்சியை எடுத்தார்கள். ஏன்னா மலையின் அடுத்த முனையில் கடல் இருந்தது. கவனம் கொஞ்சம் திசை மாறினாலும் ஜல சமாதி கன்பார்ம். மும்பை மாஸ்டர்ஸ் அருமையா அந்த சீனை கம்போஸ் பண்ணியதால் நல்ல படியாக அந்தக் காட்சியை எடுக்க முடிந்தது. விஷால் அண்ணனுடன் மீண்டும் அயோக்யா படத்தில் வில்லனா மோதுகிறேன். இது நானே எதிர்பார்க்காத வாய்ப்பு. அண்ணன் ஒரு நாள் அழைத்து சண்டக்கோழி-2 படத்தில் நம்முடைய காம்போ நல்லா இருந்தது. நீயே இந்தப் படத்தில் பண்ணு என்று வாய்ப்பு கொடுத்தார். இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்குகிறார். அதுக்கு அப்புறம் வரலட்சுமியுடன் வெல்வெட் நகரம் படமும் சம்திங் டிஃபரன்ட். இந்தப் படத்தில் வரலட்சுமியின் கேரக்டர் சண்டக்கோழி-2 படத்திலிருந்து நேர் எதிராக இருக்கும். ஏன்னா வார்த்தைக்கு வலிக்காதளவுக்கு அமைதியான பொண்ணா வருவாங்க. எனக்கு வழக்கம் போல் கர்ஜனை வேடம்.