கோ ஆப்டெக்ஸ் துணி தரம்: சட்டசபையில் எடப்பாடி, அமைச்சர்கள் வாக்குவாதம்

by Editor / 07-09-2021 03:47:14pm
கோ ஆப்டெக்ஸ் துணி தரம்: சட்டசபையில் எடப்பாடி, அமைச்சர்கள் வாக்குவாதம்

கோ ஆப்டெக்ஸ் துணியின் தரம் குறித்து இன்று சட்டசபையில் அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டமன்றத்தில் இன்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எழுந்து நேற்று கைத்தறித்துறை அமைச்சர் கோ-ஆப்டெக்ஸ் துணிகள் வாங்குவது குறித்து ஒரு வார்த்தையை திருத்த வேண்டும் என குறிப்பிட்டார். அதற்கு சபாநாயகர் அந்த வார்த்தைக்கு பதில் வேறு வார்த்தை மாற்றிக்கொள்ளலாம் என கூறினார்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து,

கோ- ஆப்டெக்ஸில் வாங்கப்படும் துணிகள் நெசவாளர்கள் சங்கத்தில் இருந்து தான் வாங்கப்படுகின்றன. நெசவாளர்கள் உருவாக்கிய அந்த துணியை தரம் இல்லாதது என சொல்வது நெசவாளர்களை கொச்சைப்படுத்துவது போல் ஆகும். அது சரியல்ல. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சிறப்பாக செயல்பட அம்மாவின் அரசு அதற்கு பல்வேறு உதவிகள் செய்தது என்று கூறினார்.

உடனே அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் எழுந்து,

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் நல்ல நிறுவனம் தான். அதில் மாற்றுக்கருத்தில்லை. அதில் துணிகள் சரியில்லை என கூறுகிறார். அதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார்.

உடனே எடப்பாடி பழனிசாமி எழுந்து, அவை முன்னவர் சமாளித்து பேசுகிறார். பத்திரிகைகளில் செய்தி வேறு மாதிரி வந்துவிடும். இதனால் நெசவாளர்கள் அச்சம் கொள்வார்கள். தவறுதலாக செய்தி வந்தால் நெசவாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அம்மாவின் அரசு கொரோனா காலத்தில் நெசவாளர்கள் நலனுக்காக ரூபாய் 340 கோடி மானியம் கொடுத்தோம் என்று கூறினார்.

அப்போது அவை முன்னவர் துரைமுருகன் எழுந்து,

கோ -ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பொருட்கள் வாங்கும்போது பார்த்து வாங்க வேண்டும். வாங்கிய துணிகள் விற்கவில்லை என்பதால் விற்பதற்காக ரூபாய் 4 கோடி விளம்பரத்திற்காக செலவு செய்யப்பட்டது என தான் அமைச்சர் கூறினார். நான் ஆணித்தரமாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். உங்கள் ஆட்சியை விட எங்கள் ஆட்சியில் நன்றாக கோ-ஆப்டெக்ஸ் சிறப்பாக செயல்படும் என்றார்.

அமைச்சர் காந்தி எழுந்து, கோ-ஆப்டெக்ஸில் துணிகள் அனைத்தும் சங்கங்கள் மூலம் வாங்கப்படுவதில்லை. ஒருசிலர் வெளிமாநிலங்களில் இருந்து வாங்கி சங்கங்கள் மூலம் கொடுத்து விடுகின்றனர். தரமில்லாத துணிகளால் அரசுக்கு 13 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எங்கள் ஆட்சியில் இது குறித்து ஆய்வு செய்து துணி வாங்க ஒரு குழு அமைத்து வாங்கப்படும் என்று கூறினார்.

 

Tags :

Share via