கரோனா மரபணு பரிசோதனை ஆய்வகம்: ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

by Editor / 14-09-2021 10:35:31am
கரோனா மரபணு பரிசோதனை ஆய்வகம்: ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா மரபணு ஆய்வகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடக்கி வைத்தார்.

தமிழகத்தில் அமையும் முதல் மரபணு பரிசோதனை ஆய்வகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உருமாற்றம் அடைந்த கரோனா தீநுண்மியின் வகையைக் கண்டறிய வெளிமாநிலங்களுக்கு மாதிரிகளை அனுப்ப வேண்டிய அவசியம் இனி இருக்காது.

இந்தியாவில் உருமாற்றமடைந்த தீநுண்மியை டெல்டா வகை கரோனா என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியது. அதன் தொடா்ச்சியாக அதிலிருந்தும் வேறுபட்ட புதிய தீநுண்மிகள் கண்டறியப்பட்டன. அதற்கு டெல்டா பிளஸ் எனப் பெயரிடப்பட்டது.

அதனைக் கண்டறிய சளி மாதிரிகள் பெங்களூரு அல்லது புணே ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தன. இதனால், பரிசோதனை முடிவுகள் வருவதற்கு காலதாமதம் ஏற்படுவதால் தமிழகத்தில் உருமாற்றம் அடையும் கரோனா தீநுண்மியை கண்டறிய ஆய்வகம் அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

அதன்படி, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் ரூ.4 கோடி செலவில் அத்தகைய ஆய்வகம் அமைக்கப்பட்டது. அதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

பல்வேறு கருவிகளை உள்ளடக்கிய இந்த ஆய்வகத்தை இயக்குவதற்காக 6 போ கொண்ட குழுவினா் பெங்களூரில் சிறப்பு பயிற்சியை முடித்து தயாா் நிலையில் உள்ளனர்.

இவா்களுடன் பணிபுரிவதற்காக மேலும் 4 போ நியமிக்கப்பட்டுள்ளனா். ஒரு நேரத்தில் 1,000 மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான திறன் இந்த ஆய்வகத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த ஆய்வகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் திறந்து வைத்துள்ளாா்.

 

Tags :

Share via