கமலா ஹாரிசுக்கு மோடி அழைப்பு

by Editor / 24-09-2021 04:21:55pm
கமலா ஹாரிசுக்கு மோடி அழைப்பு


உலகெங்கிலும் உள்ள பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக கமலா ஹாரிஸ் இருக்கிறார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார். மேலும் இந்தியா வரவும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரே லியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வாஷிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர்களுடனும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனை தொடர்ந்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை வாஷிங்டனில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்றபின் கொரோனா விவகாரம் தொடர்பாக தொலைப்பேசியில் மட்டுமே பேசிய பிரதமர் மோடி நேற்று நேரடியாக வெள்ளைமாளிகையில் சந்தித்தார்.
பிரதமர் மோடியை ஜனநாயக கட்சியின் எம்.பி. 56வயதான டக்லஸ் எம்ஹாப் வரவேற்றார்.
இந்த சந்திப்பையடுத்து, பிரதமர் மோடி, துணை அதிபர் கமலா ஹாரிஸ் இருவரும் ஊடகங்களுக்குக் கூட்டாகப் பேட்டிஅளித்தனர். அப்போது கமலா ஹாரிஸ் பேசியதாவது:
உலகெங்கும் ஜனநாயகம் அச்சுறுத்த லுக்கு உள்ளாகி இருக்கிறது. ஆதலால், இந்தியாவும், அமெரிக்காவும் தங்களின் நாடுகளிலும், உலகிலும் ஜனநாயகக் கொள்கைகளையும், அமைப்புகளையும் பாதுகாத்து விலமைப்படுத்த வேண்டும். நம்நாட்டு மக்களின் நலனுக்காக ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாப்பதும் அவசியம்
அமெரிக்காவுக்கு இந்தியா மிகவும் முக்கியமான கூட்டாளி. கொரோனா பிரச்சினை ஏற்பட்டபோதும், பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டபோதும் இருதரப்பும் நம்பிக்கைகளை பகிர்ந்து கொள்வோம். இந்திய-பசிபி்க் கடல்பகுதி குறித்து வெளிப்படையாக ஆலோசித்தோம். கொரோனா பரவல் நேரத்தில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றினோம். கொரோனாவின் தொடக்கத்தில் பல நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை வழங்கி முக்கியப் பங்காற்றியது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தபோது அமெரிக்கா தேவையான உதவிகளை வழங்கியதை நினைத்துப் பெருமைப்படுகிறது.நாள்தோறும் இந்தியா ஒரு கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்திவருவது பாராட்டுக்குரியது. இந்தியாவிலிருந்து மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி தொடங்கும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி யும், வரவேற்புக்கும் உரியது. இவ்வாறு கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
தொடர்ந்து பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்டனர். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் சமீபத்திய உலகளாவிய மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இரு தலைவர்களும் தங்கள் துடிப்பான இருதரப்பு கூட்டாண்மை, வளர்ந்து வரும் மற்றும் முக்கியமான தொழில்நுட்பங்கள், சுகாதாரம், கல்வி மற்றும் பி 2 பி இணைப்புகளை குறித்து விவாதித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “அமெரிக்காவின் துணை அதிபராக உங்கள் (கமலா ஹாரிஸ்) தேர்வு செய்தது ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று நிகழ்வாகும். நீங்கள் உலகெங்கிலும் உள்ள பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறீர்கள். ஜோ பைடன் மற்றும் உங்கள் தலைமையின் கீழ் எங்கள் இருதரப்பு உறவுகள் புதிய உயரங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன். இந்திய மக்கள் உங்களை வரவேற்க காத்திருக்கிறார்கள். இந்தியா வருகைக்காக உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

 

Tags :

Share via