பராசக்தி படத்தில் பாடல் எழுதிய உடுமலை நாராயணகவி (செப்.25 பிறந்த நாள் )

by Editor / 24-09-2021 04:33:00pm
பராசக்தி படத்தில் பாடல் எழுதிய உடுமலை நாராயணகவி (செப்.25 பிறந்த நாள் )

 

உடுமலை நாராயணகவி (செப்டம்பர் 25, 1899 - மே 23, 1981) என்கிற நாராயணசாமி முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார்.விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; முத்துசாமிக்கவிராயரின் மாணவர்; ஆரம்ப காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார். இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன. 1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர். நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.


ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு `கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர். 


அறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்களுக்கும் கலைஞர் மு. கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா திரைப்படங்களுக்கும், பிரபாவதி, காவேரி, சொர்க்கவாசல், தூக்குத்தூக்கி, தெய்வப்பிறவி, மாங்கல்யபாக்கியம், சித்தி, எங்கள் வீட்டு மகாலட்சுமி, ரத்தக் கண்ணீர், ஆதிபராசக்தி, தேவதாஸ் போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர்.ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். நேர்மையும், சொல்திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர்.


1899ஆம் ஆண்டில் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள பூவிளைவாடி என்னும் பூளவாடிச் சிற்றூரில் கிருஷ்ணசாமி முத்தம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நாராயணசாமி என்பதாகும். நான்காம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்ட நாராயணசாமி, கிராமியக் கலைகளான புரவியாட்டம், சிக்குமேளம், தம்பட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில்கும்மி போன்ற கொங்கு மண்ணின் கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ஆர்வத்துடன் பங்கேற்றார்.நாராயணகவியை கிராமபோன் கம்பெனிக்கு பாட்டெழுதித் தர வருமாறு இயக்குநர் ஏ.நாராயணன் சென்னைக்கு அழைத்தார். 


அப்படியே திரைப்படப் பாடல் உலகிலும் கவிராயர் நுழைந்தார். முதன்முதலாக கவிதை எழுதிய திரைப்படம் "சந்திர மோகனா அல்லது சமூகத்தொண்டு" ஆகும். "கவிராயர்" எனத் திரையுலகத்தினரால் அழைக்கப்பட்ட இவரிடம் பாடல்களைப்பெற அந்நாளில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நடையாய் நடந்தார்கள். அந்நாளில் புகழ்பெற்ற கவிஞர் பாபநாசம் சிவனை விட அதிகமாகப் பாடல்களை எழுதியவர் நாராயணகவியாவார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் போன்றோர் இவருக்குப் பின்னர் வந்தவர்கள். அன்றைக்கு இவரால் எழுதப்பட்ட பாடல்கள் கருத்துக் கருவூலங்களாக இருந்தன. புதிய உத்திகளைக் கையாண்ட நாராயணகவி, உழைப்பாளர்களைப் பற்றியும் ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார். தமிழ்த் திரைப்படத்தில் அறிவைப் புகுத்தி மக்களைப் பண்பட வைத்த கவிஞர், நல்ல செய்திகளை மட்டுமே நாட்டுக்குச் சொல்லி உலகை உயர்த்தப் பாடுபட்டார்.

 

Tags :

Share via