இதுவரை ரூ.1000 கோடி கோவில்  ஆக்கிரமிப்பு சொத்துகள் மீட்பு  அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

by Editor / 29-09-2021 04:21:20pm
இதுவரை ரூ.1000 கோடி கோவில்  ஆக்கிரமிப்பு சொத்துகள் மீட்பு  அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி



 தங்க நகைகளை கட்டியாக உருக்குவதில் தூசி அளவு கூட தவறு நடக்காது என அய்யப்பன் மீது ஆணையிட்டு கூறுகிறேன் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
 காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 49 கிரவுண்ட் நிலம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.


அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறுகையில்,
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான 49 கிரவுண்டு இடம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை வேறு பயன்பாட்டிற்கு கொண்டு வர ஆய்வு மேற்கொள்ள தனியார் கட்டிட வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு அறிக்கை பெற்றதும் முடிவெடுக்கப்படும். இந்த இடத்தை ஆக்கிரமித்தவர்கள் ரூ.12 கோடி வாடகை செலுத்த வேண்டியுள்ளது. அதனை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.


தி.மு.க. அரசு பொறுப்பேற்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 1000 கோடி மதிப்பிற்கு மேலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட இடங்கள் மேலும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்ள அதிகாரத்தின் படியும் அர்ச்சகர்களை நியமிக்க தக்கார்கள் மற்றும் இணை ஆணையர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.


திருக்கோயில்களில் 2011ம் ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்தான் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்துள்ள வழக்கை சந்திக்க இந்து சமய அறநிலையத்துறை தயாராக உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்தவே வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறுகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளது. கோயில்களை திறப்பதில் பாரபட்சம் கிடையாது. ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் இந்து கோயில்கள் மட்டும் மூடப்பட்டுள்ளது என்ற தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.


திருச்செந்தூர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கையின் அடிப்படையில் நேற்றிலிருந்து எளிதாக தரிசனம் செய்ததாக முகநூலில் பக்தர்கள் பதிவு செய்துள்ளனர்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மீட்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த விவரம் முழுமையாக இணையதளத்தில் வெளியிடப்படும்.


சமயபுரம் திருக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டபோது மூட்டை மூட்டையாக காணிக்கை நகைகளை கட்டி வைத்திருந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக நகைகளை கட்டி வைத்திருந்ததாக கூறினார்கள். இதை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். பயன்பாட்டிற்கு இல்லாத, உடைந்த நகைகளை மட்டுமே உருக்க திட்டமிட்டுள்ளோம். மன்னர்கள், ஜமீன்தார்கள், அறங்காவலர்கள் கொடுத்த நகைகளை உருக்க முயற்சிக்கவில்லை. ஓய்வு பெற்ற நீதிபதிகளின் மூலம் சென்னை மண்டலத்திற்கு ராஜீ, மதுரை மண்டலத்திற்கு ஆர்.மாலா, திருச்சி மண்டலத்திற்கு ரவிசந்திரபாபு ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு நகைகளை கணக்கிடும் பணியில் ஈடுபட உள்ளனர். நகைகளை பிரித்து முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும்.


ஒன்றிய அரசுக்கு சொந்தமான மும்பையில் உள்ள நிறுவனத்திடம் அளித்து 24 கேரட் தங்க கட்டிகளாக பெறப்பட்டு, வைப்பு வங்கியில் வைத்து வட்டி தொகை பெரிய அளவில் கிடைக்கும் என கூறுகிறார்கள். இந்த வட்டி பணத்தை வைத்து திருக்கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையிலான திட்டமே தவிர, தூசி அளவு கூட இதில் தவறு நடக்காது என அய்யப்பன் மீது ஆணையிட்டு கூறுகிறேன். எனவே இதை யாரும் விமர்சிக்க வேண்டாம் என அமைச்சர் தெரிவித்தார்.

 

Tags :

Share via