விவசாயிகள் உயிரிழந்த பகுதிக்கு  மோடி செல்வாரா? பிரியங்கா காந்தி கேள்வி 

by Editor / 05-10-2021 04:06:12pm
விவசாயிகள் உயிரிழந்த பகுதிக்கு  மோடி செல்வாரா? பிரியங்கா காந்தி கேள்வி 

பிரதமர் நரேந்திர மோடி  லட்சுமிபூர் செல்வாரா என பிரியங்கா காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லட்சுமிபூரில் மாநில துணை முதலமைச்சர் மற்றும் மத்திய இணையமைச்சர் பங்கேற்க சென்ற விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும் விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் அமைச்சர் காருடன் வந்த கார் மோதி, போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிகிச்சை பலனின்றி மேலும் இரண்டு விவசாயிகள் உட்பட 8 பேர் இதில் உயிரிழந்தனர்.இந்நிலையில் சம்பவ இடத்திற்கு செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை உத்தரபிரதேச போலீசார் தடுத்து நிறுத்தி வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். 28 மணி நேரமாக எவ்வித உத்தரவு அல்லது வழக்குப்பதிவு இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை ஏன் உங்கள் அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது? என்றும் பிரியங்கா காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.


மேலும், தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், இந்த உயிரிழப்பு சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்யாமல் எதிர்க் கட்சியினரை ஏன் கைது செய்துள்ளீர்கள் என்றும் பிரதமருக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.


உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற உள்ள 'ஆசாதி -75 புதிய நகர்ப்புற இந்தியா' என்கிற நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்க உள்ளார். இதை குறிப்பிட்டு பேசிய பிரியங்கா, பிரதமர் மோடி சம்பவம் நடத்த இடமான லட்சுமிபூருக்கு செல்வரா? லக்னோவில் இந்த விழா கொண்டாட உங்களுக்கு என்ன தார்மீக அதிகாரம் உள்ளது என்றும் மோடிக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நாடு முழுவதும் கண்டன போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

Tags :

Share via