வத்திராயிருப்பு அருகே கைதிகள் தப்பி ஓட்டம்: 3 போலீசார் பணியிடை நீக்கம்

by Editor / 13-10-2021 04:02:38pm
வத்திராயிருப்பு அருகே கைதிகள் தப்பி ஓட்டம்: 3 போலீசார் பணியிடை நீக்கம்

சிறைக்கு அழைத்துச் செல்லும் போது கைதிகள் தப்பி ஓடிய விவகாரத்தில் அவர்களுடன் பாதுகாப்புக்குச் சென்ற 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் தாலுகா வத்திராயிருப்பு அருகே கடந்த சனிக்கிழமை அன்று கூமாபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராம்குமார் தலைமையிலான போலீசார் வத்திராயிருப்பு செல்லும் சாலையில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.


அப்போது கூமாபட்டியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 19), முத்துக்குமார் (வயது 24) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்தனர். போலீசார் வாகனத்தை நிறுத்தச் சொன்னதற்கு நிறுத்தாமல் கொடமுருட்டி பாலத்தில் மோதி கீழே விழுந்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் துரத்திச் சென்று அவர்களை மடக்கிப் பிடித்தனர்.


அப்போது அவர்களது வண்டியில் மூன்று அடி நீளமுள்ள வாள் வைத்திருந்ததைப் பார்த்த போலீசார் இருவரையும் கைது செய்து திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அருப்புக்கோட்டை கிளைச் சிறைக்குச் கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியில் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று கூறியதையடுத்து போலீசார் அதற்கு அனுமதி அளித்தனர். அப்போது கைதிகள் இருவரும் தப்பி ஓடினர்.


இது தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாவட்ட எஸ்.பி. மனோகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இந்த தேடுதலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முத்துக்குமாரும் திங்கள்கிழமை அதிகாலை அருண்குமார் இருவரும் பிடிபட்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவின் பேரில் கைதிகளை அழைத்துச் சென்ற கூமாபட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் கனகராஜ், ஈஸ்வரன், விஜயகுமார் ஆகிய மூன்று பேரும் பணியில் கவனக் குறைவாக இருந்ததாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

 

Tags :

Share via