: கேரளாவுக்கு ரெட் அலர்ட்-வெள்ளத்தில் மிதக்கிறது; 27 பேர் பலி

by Editor / 18-10-2021 03:40:48pm
: கேரளாவுக்கு ரெட் அலர்ட்-வெள்ளத்தில் மிதக்கிறது; 27 பேர் பலி

திருவனந்தபுரம், கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, பத்தனம்திட்டா உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மழை அடித்து கொட்டுகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. அங்கு வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் இணைந்து ஈடுபட்டுள்ளனர். படகுகள், ஹெலிகாப்டர் மூலம் மக்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. வெள்ளத்தில் சிக்கிய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு, 235 முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். கனமழையால் ஆங்காங்கே மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளே மூழ்கும் அளவுக்கு வெள்ளம் ஓடுவதால் சாலை போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து, அங்கு பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் நீர் வரத்து அதிகரிப்பாலும் அணைகள் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக கோட்டயம் மாவட்டத்தின் கூட்டிங்கால் மற்றும் இடுக்கி மாவட்டத்தின் கோக்கையார் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இதுமட்டுமின்றி மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 27 ஆக உயர்ந்துள்ளது.

ஐப்பசி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலை யில் கனமழை பெய்வதால், சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களை குமுளி பகுதியில் தேனி மாவட்ட போலீசார் தடுத்து திருப்பி அனுப்புகின்றனர்.

 

Tags :

Share via