முதல்வர் வீடு முன்பு உண்ணாவிரதம் - டி.ராஜேந்தர் ஆவேசம்

by Editor / 20-10-2021 07:42:15pm
முதல்வர் வீடு முன்பு உண்ணாவிரதம் - டி.ராஜேந்தர் ஆவேசம்

 

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் வெளியாவது தொடர்பாக டி.ராஜேந்தர் மற்றும் உஷா டி.ராஜேந்தர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்குச் சென்று மனு அளித்தனர். அந்த மனுவில், 'தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களுக்கு ஜனநாயக முறைப்படி இல்லாமல் அமைக்கப்பட்ட தமிழ்நாடு நடப்பு விநியோகஸ்தர் சங்கம் என்ற பெயரில் சிலர் கட்டபஞ்சாயத்து செய்து வருகின்றனர். சிலம்பரசனை வைத்து அன்பானவன், அசராவதவன், அடங்காதவன் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு எந்த பணமும் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்பு நடிக்கும் எந்த படத்தையும் வெளி வரவிடாமல் ரெட்கார்டு போட்டு வருகிறார்.

அதற்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தினர் மறைமுகமாக உதவி வருவதாகவும் கூறி தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், அருள்பதி மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முரளி உட்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.


சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த பிறகு டி.ராஜேந்தர் மற்றும் உஷா டி ராஜேந்தர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது உஷா, 'தாங்கள் மைக்கேல் ராயப்பனுக்கு எந்த பணமும் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் தொடர்ச்சியாக சிம்பு நடித்து வரும் படங்களுக்கு ரெட் கார்டு போடுகிறார்கள்.


தமிழ்நாடு நடப்பு விநியோகஸ்தர் சங்கம் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் அருள்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கின்றனர். சிம்புவின் மாநாடு படத்தை தீபாவளியன்று வரவிடாமல் தடுத்தால், நான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருக்க தயாராக இருக்கிறேன்' என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via