அரசு உத்தரவு...தடுப்பூசியை முழுமையாக செலுத்தாதவர்களுக்கு ரேசன்  கிடையாது

by Editor / 18-11-2021 03:06:56pm
அரசு உத்தரவு...தடுப்பூசியை முழுமையாக செலுத்தாதவர்களுக்கு ரேசன்  கிடையாது

ரேசன் கடைக்காரர் டிசம்பர் 31-ந்தேதிக்குள் தகுதியுள்ள அனைத்து உறுப்பினர்களும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசியின் அவசியம்  குறித்து விழிப்புணர்வை அரசு தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
 
இதற்கிடையே தடுப்பூசியின் 2-வது டோசை செலுத்தி கொள்ளும் விகிதம் அதிகரிக்கவில்லை. இதனால் முதல் டோசை செலுத்திக் கொண்டவர்கள் தாமதிக்காமல் 2-வது டோசையும் குறிப்பிட்ட காலத்தில் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து மாநில அரசுகள் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது.

இந்தநிலையில் மத்திய பிரதேசத்தில் தடுப்பூசியை முழுமையாக செலுத்தாதவர்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்படமாட்டாது என்று அரசு அதிரடியாக அறிவித்து உள்ளது.

இதுகுறித்து அம்மாநிலத்தின் உணவு மற்றும் சிவில் சப்ளை துறை ஒரு உத்தரவை பிறப்பித்து உள்ளது. அதில், “கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தாத பயனாளிகளுக்கு வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்கு பிறகு ரேசன் பொருட்கள் வழங்கப்படமாட்டாது.

குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்களில் தகுதி உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை ரேசன் கடைக்காரர் டிசம்பர் 31ம் தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

தடுப்பூசி தொடர்பான தேவையான தகவல்களை கடைகளில் ஒட்ட வேண்டும். பயனாளிகள் யாருக்காது தடுப்பூசி போடப்படாவிட்டால் கடைக்காரர் அவர்களது பட்டியலையும், முதல் டோஸ் மட்டுமே செலுத்திக்கொண்ட பயனாளிகளின் பட்டியலையும் ஒவ்வொரு வாரமும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநில சுகாதாரத்துறை தரவுகளின்படி இதுவரை 90.18 சதவீதம் பேர் முதல் டோசை செலுத்திக்கொண்டுள்ளனர். 50.1 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசியை செலுத்தி இருக்கிறார்கள்.

இதுகுறித்து உணவு மற்றும் சிவில் சப்ளை துறை முதன்மை செயலாளர் பைஸ் அகமது கித்வாய் கூறும்போது, “தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலைமையை டிசம்பர் 31-ந்தேதி பகுப்பாய்வு செய்வோம். தடுப்பூசி போடாவிட்டால் ரேசன் கிடையாது என்பதின் அடிப்படை நோக்கம் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மக்களை ஊக்குவிப்பதாகும்” என்றார்.

 

Tags :

Share via