நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பெற்றது உண்மையான ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை

by Editor / 23-02-2022 04:05:52pm
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பெற்றது உண்மையான ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி இமாலய வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றி உண்மையான ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
     தமிழகத்தின் 21 மாநகராட்சிகளில் உள்ள 1373 வார்டுகள், 138 நகராட்சிகளின் 3842 வார்டுகள், 489 பேரூராட்சிகளின் 7605 வார்டுகளின் தேர்தல்கள் பிப்ரவரி 19 சனிக்கிழமை நிறைவுற்று பிப்ரவரி 22 செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
     திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டவர்கள் அதிகமான இடங்களில் வென்று, அமோகமான வெற்றியைப் பெற்றுள்ளனர்.
     2021 மே 7ஆம் நாளில் தமிழ்நாட்டில் திமு.க. ஆட்சி அமைந்தது.  தளபதி மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனார்.  கடந்த எட்டு மாதங்களில் இவரின் ஆட்சி, தமிழகத்தின் நிலையைத் தலைகீழாக மாற்றிவிட்டிருக்கிறது.  திமுக அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன;   மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்;  வருங்காலம் பற்றிய புதிய கனவுகளை வெளிப்படுத்தும் விதத்தில் இளைஞர்களின் மனோநிலை மாறிவிட்டிருக்கிறது.  சுருங்கச் சொன்னால், தமிழகத்தில் ஒரு புதிய புரட்சியே நடைபெற்று வருகிறது என்பதே சரியான படப்பிடிப்பு ஆகும்.
     திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில்தான், எதிர்க்கட்சியாக இருந்து, நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றியைக் குவித்தார்.  சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரும் பெற்றிவாகை சூடி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.  நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் அவரின் வெற்றிப் பயணம் உள்ளாட்சி பஞ்சாயத்து தேர்தலில் தொடர்ந்தது.  அதைவிடவும் அதிகமான வெற்றியை இப்போது நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மு.க.ஸ்டாலின் பெற்றிருக்கிறார்.
     கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமி யாரும் புகமுடியாத கோட்டையை அ.இ.அ.தி.மு.க-வுக்கு உருவாக்கியிருக்கிறார் என்று பிரச்சாரம் தொடர்ந்து நடந்து வந்தது.  அந்தக் கோட்டையும் மு.க.ஸ்டாலின் படை முன்னர் தவிடு பொடியாகி விட்டிருக்கிறது.  தமிழகம் முழுவதும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்பதை எவ்வித ஐயத்திற்கும் இடமில்லாமல் இந்த நகர்ப்புற தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன.
     கலைஞர் அவர்கள், மு.க.ஸ்டாலின் உழைப்பின் திருவுருவம் என்று கூறினார்.  அந்த உழைப்புக்கு, ஓயாமல் உழைத்த பெருமை கலைஞருக்குரியது.  கலைஞரிடம் உள்ள அந்த ஓய்வு ஒளிச்சல் இல்லாத உழைப்பு, மறுஅவதாரமாக வெளிவந்து, மு.க.ஸ்டாலின் உருவத்தில் தமிழகத்தில் பவனி வருகிறது.
தளபதி தலைமையில் தமிழகத்தில் நடப்பது தி.முக. ஆட்சி அல்ல; திராவிட மாடல் ஆட்சியின் காட்சி!  எல்லாவற்றுக்கும் மேலாக இது தமிழ் மக்களின் ஆட்சி! ஒவ்வொரு தமிழர்க்குடி மக்களும், தமிழ்நாட்டில் தனது ஆட்சி நடக்கிறது என்ற உணர்வோடு வலம்வரும் சூழ்நிலையை, மனோநிலையை மு.க.ஸ்டாலின் அவர்கள் உருவாக்கியிருக்கிறார்.
     தமிழ்நாட்டில் தொடரும் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி, காலாகாலத்திற்குத் தொடர்ந்திட வாழ்த்துவோம்!  தமிழ்நாட்டில் தொடரும் இந்த நல்லாட்சி இந்தியா முழுவதுக்கும் முன்னுதாரணம் படைக்கும் பொற்கால ஆட்சியாக மலரும்!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. செயற்கையான வெற்றி பெற்றிருப்பதாகச் சிலர் கூறுகின்றனர்.  திமுக பெற்றது இயற்கையான வெற்றி மட்டுமல்ல;  இதுதான் உண்மையான ஜனநாயக வெற்றி!  தமிழகத்தில் திராவிடப் பாரம்பரிய ஜனநாயகம் என்றும் வெல்லும்! இதை இன்றைய வரலாறு மட்டுமல்ல;  வருங்கால வரலாறும் உரக்கவே சொல்லும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : DMK loses in urban local body elections The victory of true democracy was won by Prof. K.M. Report by Qadir Mohiuddin

Share via