மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஜப்பான் நிறுவனம் ரூ.1,500 கோடி நிதி

by Staff / 05-05-2022 12:52:59pm
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஜப்பான் நிறுவனம் ரூ.1,500 கோடி நிதி

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாக அறிவிக்கப்பட்ட பஞ்சாப், அசாம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் கட்டுமான பணிகள் நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை உடனே தமிழக அரசு ஒப்படைக்கவில்லை என மத்திய அரசின் சுகாதாரத்துறை அப்போது கூறியதால் மேலும் சர்ச்சையானது.

இது சம்பந்தமாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த மாதம் கூறும்போது, “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி பெறுவது சம்பந்தமாக ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்துடன் கடந்த டிசம்பர் மாதம் 24-ந்தேதி ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் மத்திய அரசும், ஜைக்கா நிறுவனமும் ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தது.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கான மொத்த செலவில் 85 சதவீதத்தை ஜைக்கா நிறுவனம் வழங்கும் வகையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்கான திட்டமதிப்பீடு சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நடைபெறாமல் இருந்தது. அந்த பகுதிக்கு சென்று வரும் சாலைகள், சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் மட்டுமே ரூ. 5 கோடி செலவில் நடந்து முடிந்திருந்தது.

இப்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் மத்திய அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ரூ. 1,500 கோடியை ஒதுக்கி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மீதம் உள்ள நிதியை அக்டோபர் 26-ந்தேதிக்குள் ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மொத்த திட்ட மதிப்பான ரூ. 1,977 கோடியில் ஜைக்கா நிறுவனம் ரூ. 1,500 கோடியை ஒதுக்கி உள்ளதால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

 

Tags :

Share via